பிரதிநிதித்துவப்படம் 
இந்தியா

கேரளாவில் பாஜக வேட்பாளர்கள் இருவரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி: நீதிமன்றத்தில் அவசர மனுத்தாக்கல் 

ஏஎன்ஐ

கேரள மாநிலத்தில் தலச்சேரி மற்றும் குருவாயூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதை எதிர்த்து இரு வேட்பாளர்களும் உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

இரு வேட்பாளர்களும் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் இன்று பிற்பகலில் விசாரிக்கும் எனத் தெரிகிறது.

கேரளாவில் 140 தொகுதிகளுக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. இந்தத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலில் குருவாயூர் தொகுதி பாஜக வேட்பாளரும், மகிளா மோர்ச்சா மாநிலத் தலைவருமான நிவேதிதா சுப்ரமணியன், கண்ணூர் மாவட்ட பாஜக தலைவரும், தலச்சேரி தொகுதி பாஜக வேட்பாளருமான ஹரிதாஸ் ஆகியோரின் வேட்புமனுக்கள் பரிசீலனையில் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதில் பாஜக வேட்பாளர்கள் ஹரிதாஸ், நிவேதிதா சுப்பிரமணியன் வேட்புமனுவில், ஏ படிவத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவின் கையொப்பம் இல்லை என்பதால் அதிகாரிகள் நிராகரித்தனர்.
அதேபோல இடுக்கி மாவட்டம் தேவிகுளம் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தனலட்சுமியின் வேட்புமனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதுகுறித்து தலச்சேரி பாஜக வேட்பாளர் ஹரிதாஸ் கூறுகையில், “நான் வெள்ளிக்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்தேன். எங்களுக்கு இந்தப் பிரச்சினை தெரியவந்ததையடுத்து, ஆன்லைனில் ஆவணத்தைப் பெற்று 3 மணிக்குள் தாக்கல் செய்துவிட்டோம். ஆனால், நாங்கள் தாக்கல் செய்த ஆவணத்தை வருவாய்த்துறை அதிகாரி ஏற்க மறுத்துவிட்டார். இந்த விவகாரத்தை நான் உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்வேன்’’ எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே பாஜக வேட்பாளர்கள் ஹரிதாஸ், நிவேதிதா சுப்பிரமணியன் இருவரும் கேரள உயர் நீதிமன்றத்தில் அவசர மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு இன்று பிற்பகலில் விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.

தலச்சேரி தொகுதியிலும, குருவாயூர் தொகுதியிலும் பாஜகவுக்கு கணிசமான வாக்குகள் இருக்கின்றன என்பதால், பாஜக வேட்பாளர்கள் உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். ஆனால், தலச்சேரி தொகுதியைப் பொறுத்தவரை 1977-ம் ஆண்டு முதல் இங்கு இடதுசாரிகள்தான் வாகை சூடி வருகின்றனர். 2016-ம் ஆண்டு தேர்தலில் பாஜக வேட்பாளர் வி.கே.சஞ்சீவன் 22,115 வாக்குகள் பெற்றார். மார்க்சிஸ்ட் எம்எல்ஏ ஏஎன் ஷம்சீர் 34,117 வாக்குகள் வித்தியாசத்தில் யுடிஎப் வேட்பாளர் ஏ.பி.அப்துல்லா குட்டியைத் தோற்கடித்தார்.

SCROLL FOR NEXT