இந்தியா

நீதிபதிகள் நியமனத்தில் யாரும் தலையிட கூடாது: பிரணாப் முகர்ஜி கருத்து

பிடிஐ

நீதிபதிகள் நியமன நடைமுறையில் யாரும் தலையிடக்கூடாது என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய சட்டத்தை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. இந்நிலையில் குடியரசுத் தலைவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

டெல்லி உயர் நீதிமன்ற பொன்விழா டெல்லி விஞ்ஞான் பவனில் நேற்று நடைபெற்றது. அதை தொடங்கி வைத்து பிரணாப் பேசியதாவது: உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமிப்பதற்கு உள்ள நடைமுறை அமைப்புகள் எதுவாக இருந்தாலும் இந்த நடைமுறை நிர்ணயிக்கப்பட்ட தெளிவான கோட்பாடுகள் அடிப்படையில் இருக்க வேண்டும். இதில் யாரும் தலையிடக்கூடாது.

நீதித்துறையும் ஆய்ந்து பார்த்து சுயமாகவே தம்மை திருத்திக் கொள்ள வேண்டும். நீதிபதிகள் நியமன நடைமுறை நேர்மைத்தன்மையுடன் உயர்கோட் பாடுகளை பின்பற்றுவதாக இருப்பது அவசியம். தேர்வு நடைமுறை வெளிப்படையாக இருக்க வேண்டும்.

அனைவரும் அணுக கூடியதாக நீதித் துறை இருக்கவேண்டும். நீதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால் அது நீதி மறுக்கப்படுவதற்கு ஒப்பானதாகும். உச்ச நீதிமன்றத்தில் 60 ஆயிரம் வழக்குகள் தேங்கியுள்ளன. மேலும் 40 லட்சம் வழக்குகள் உயர் நீதிமன்றங்களில் தேங்கிக்கிடக்கின்றன. மாவட்ட மற்றும் சார்பு நீதிமன்றங்களில் 2.6 கோடி வழக்குகள் தேங்கியுள்ளன. இவற்றுக்கு புது முயற்சிகள் மூலமாக தீர்வு காணப்படவேண்டும்.நீதிமன்றங்களில் வசதிகளை மேம்படுத்த நிதி ஆதாரம் அவசியம். நீதிபதிகள் பணி காலியிடங்கள் விரைந்து நிரப்பப்பட வேண்டும்.

மக்களின் உரிமைகளுக்கு ஆதரவாக தபால் அட்டையில் வரும் கடிதம், பத்திரிகை செய்திகள் அடிப்படையில் நீதிமன்றங்கள் நடவடிக்கை எடுக்கின்றன. இது சாதாரண மக்களுக்கு நீதி கிடைக்க உதவுகிறது. நீதித்துறை அதிக ஈடுபாடு காட்டும்போது அதிகாரப் பகிர்வு நடைமுறைக்கு பாதிப்பு வரக்கூடாது. ஜனநாயகத்தின் அங்கமாக உள்ள அனைத்து அமைப்புகளும் அதற்குரிய வரம் புக்குள் செயல்படவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.-

SCROLL FOR NEXT