இந்தியா

ஓய்வு பெற்ற ராணுவ மோப்ப நாய்கள், குதிரைகள், கழுதைகளுக்கு புதுவாழ்வு

பிடிஐ

ராணுவப் பணியில் இருந்து ஓய்வுபெறும் நாய்கள், குதிரைகள், கழுதைகளை, அவை இறக்கும் வரை பராமரிக்க சிறப்பு ஏற்பாடுகளை ராணுவம் செய்து வருகிறது. மேலும் அவற்றை தத்து அளிப்பதற்காக தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

வெடிகுண்டுகளை கண்டுபிடித்தல், ரகசிய இடங்களை கண்டறிதல், எதிரிகளை பிடித்தல், ஆதாரங்களை திரட்டுதல் என பல்வேறு பணிகளுக்கு ராணுவத்தில் மோப்ப நாய்கள் பயன்படுத்தப்படுகின்றன. வாகனங்களில் செல்ல முடியாத இடங்களில் கண்காணிப்பு பணிக்கு குதிரையும், பொருட்களை சுமக்க கழுதையும் பயன்படுத்தப்படுகிறது.

ராணுவத்தில் இருந்த ஒவ்வொரு ஆண்டும் 50 நாய்களும் சுமார் 1000 குதிரைகள், கழுதைகளும் ஓய்வு பெறுகின்றன.

இவ்வாறு ஓய்வுபெறும், நாய்களை தத்து எடுக்க பலர் முன்வந்தாலும் குதிரைகள், கழுதைகளை தத்து எடுக்க யாரும் முன்வருவதில்லை.

இந்நிலையில் முதுமை அடைந்தபின் இந்த விலங்குகள் வேதனையற்ற மரணம் அடையும் வகையில் கருணைக் கொலை செய்யப்படுகின்றன. இவற்றை வைத்து பராமரிப்பதற்கு ஆகும் செலவு, இடவசதி மற்றும் பிற அடிப்படை வசதிகள் இல்லாமையும் இதற்கு காரணம் ஆகும்.

இந்நிலையில் இது தொடர்பான வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், ராணுவத்தின் இந்த நடவடிக்கை, 1960-ம் ஆண்டின் மிருகவதை தடுப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று கூறியது.

இதையடுத்து இந்த விஷயத்தில் 6 மாதங்களுக்குள் புதிய கொள்கை வகுக்கப்படும் என்று நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் கடந்த செப்டம்பர் மாதம் உறுதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்தக் கொள்கை இன்னும் இறுதி செய்யப்படாவிடினும், தீராத நோய், ஆறாத காயம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட விலங்குகளை தவிர மற்றவற்றை இனி கொல்வதில்லை என்ற முடிவுக்கு ராணுவம் வந்துள்ளது.

மேலும் இவற்றை வைத்து பராமரிக்க நாடு முழுவதும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

SCROLL FOR NEXT