மும்பை நகரில் முகக்கவசம் அணியாமல் சென்ற பெண்ணைத் தடுத்து நிறுத்தி முகக்கவசம் அணியுமாறு கூறிய மாநகராட்சி ஊழியர் மீது அந்தப் பெண் தாக்குதல் நடத்திய வீடியோ வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த ஒரு மாதமாக கரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அமராவதி, புனே உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மக்களுக்குக் கடும் கட்டுப்பாடுகளும், பல்வேறு நகரங்களில் லாக்டவுனும் அமல்படுத்தப்பட்டுள்ளன.
தொடர்ந்து 2-வது நாளாக மகாராஷ்டிர மாநிலத்தில் 25 ஆயிரம் பேர் கரோனாவில் இன்று பாதிக்கப்பட்டுள்ளனர். மும்பையில் மட்டும் கடந்த ஒரு வாரத்தில் 13 ஆயிரம் பேருக்குப் புதிதாகத் தொற்று ஏற்பட்டுள்ளது.
இதனால் மும்பையில் மக்கள் முகக்கவசம் இன்றி வெளியே சென்றால் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், மகாராஷ்டிராவில் அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், திரையரங்குகள், கூட்ட அரங்குகளில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி அளித்து நேற்று அரசு உத்தரவிட்டது.
மக்கள் முகக்கவசம் அணிந்து செல்ல வலியுறுத்தி, மும்பை மாநகராட்சி சார்பில் பணியாளர்கள் கண்காணிப்பில் ஈடுட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று முகக்கவசம் அணியாமல் செல்லும் பெண்ணைத் தடுத்த நகராட்சி ஊழியரை அந்தப் பெண் தாக்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
மும்பை காண்டிவாலி பகுதியில் ஒரு பெண் முகக்கவசம் அணியாமல் ஆட்டோவில் ஏறினார். அந்தக் காட்சியைப் பார்த்த மாநகராட்சி ஊழியர் அந்தப் பெண்ணின் உடையைப் பிடித்து, "நில்லுங்கள், முகக்கவசம் அணிந்து செல்லுங்கள்" என்று கூறினார்.
இதனால், ஆத்திரமடைந்த அந்தப் பெண் ஆட்டோவில் இருந்து இறங்கி வந்து, மாநகராட்சி பெண் ஊழியரிடம், "என்னை எப்படித் தடுத்து நிறுத்தலாம், என்னைத் தொட்டுப் பேச உனக்கு என்ன துணிச்சல்" என்று கூறி நகராட்சி ஊழியரை முகத்திலும், தலையிலும் கடுமையாகத் தாக்கியுள்ளார்.
அந்த நகராட்சி ஊழியர், "முகக்கவசம் அணியத்தானே கூறினேன்" என்று கூறியபோதும் அந்தப் பெண் அவரைத் தாக்கும் காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது.