தமிழகத்தின் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் தேவேந்திரகுலத்தான், கடையன், காலாடி, குடும்பன், பள்ளன், பன்னாடி மற்றும் வாதிரியான் ஆகிய 7 சமூகங்கள் இடம் பெற்றுள்ளன. இவை ஒரே சமூகத்தின் 7 பிரிவுகள் எனவும், இவற்றை ‘தேவேந்திரகுல வேளாளர்’ என ஒரே பெயரில் அழைக்க வேண்டும் என்றும் அந்த சமூகங்களின் பெரும் பாலானவர்களிடம் கோரிக்கை எழுந்தது. தமிழக அரசின் பரிந்துரையின்படி மத்திய அரசும் அதன் மீதான சட்டதிருத்தம் கொண்டுவர முடிவு செய்தது.
இதற்காக ’இந்திய அரசியல் சட்டம் (பிற்படுத்தப்பட்ட சமூகங்கள்) சட்டதிருத்த மசோதா 2021’ எனும் பெயரில் மசோதா பொது பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பாகத்தின் இறுதி நாளான பிப்ரவரி 13-ல் மக்களவையில் தாக்கலானது. இதன் மறுநாள் சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் அம்மசோதா குறித்து பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
இச்சூழலில், நேற்று மக்களவையில் தேவேந்தரகுல வேளாளர் மசோதா திடீர் எனத் தாக்கல் செய்யப்பட்டது. இதில், பேசிய சுமார் 20 உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் வட மாநிலங்களின் பாஜக எம்.பி.க்களாகவே இருந்தனர். அவர்களில் பலரும் எழுதி வைத்த தாளிலிருந்து தமிழ் வார்த்தைகளை மட்டும் தட்டுத்தடுமாறி படித்தனர். இதையடுத்து இந்த சட்டதிருத்த மசோதா மக்களவையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள் ளது.
இந்தவிவாதத்தில் கலந்து கொண்ட ஹரியாணாவின் சிர்ஸா தொகுதி பாஜக எம்.பி சுனிதா துங்கல் பேசும்போது, ‘விவசாயத்தை தொழிலாகக் கொண்டதால் இந்த சமூகத்தினர் வேளாளர் என்றழைக்கப் படுகின்றனர். இவர்கள், மூவேந்தர்களான சேர சோழ பாண்டியரின் மருதம் நிலத்தில் வாழ்ந்தவர்கள். இவர்களை பற்றி சங்க இலக்கியங்களிலும் குடும்பர், தேவேந்தரர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் மீதானக் குறிப்புகள் தமிழ் கல்வெட்டுகளிலும் மல்லர், தேவேந்தரர் எனவும் எழுதப் பட்டுள்ளது ’ எனத் தெரிவித்தார்.
இதே மசோதாவின் மீது கர்நாடகாவின் குல்பர்கா தொகுதி பாஜக எம்பியான உமேஷ் ஜி.ஜாதவ் பேசுகையில், ‘இந்த ஏழு பிரிவுகளையும் தேவேந்தரகுல வேளாளர் என்றழைப்பதன் மூலம் அவர்களுக்கு சமூகத்தில் மரியாதையும், கவுரவமும் கிடைக் கும் என்றார்.
பகுஜன் சமாஜ் எம்.பியான கிருஷ் சந்திரா பேசும்போது, ’தமிழகத்தில் எஸ்.சி, எஸ்.டி சமூகத்தினர் மீது அதிகமான பாரபட்சம் காட்டப்படுகிறது. இதுபோன்ற செயல்களில் முடிவிற்கு கொண்டு வருவது அவசியம்’ எனத் தெரிவித்தார்.
இறுதியில் விவாதத்திற்கு பதில் அளிக்கும் வகையில் மசோதா மீது மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் அமைச்சர் தாவர்சந்த் கெல்லோட் பேசுகையில், ‘இந்த சட்டம் 1950-ல் எஸ்.சி, எஸ்.டிக்கள் மீதான கொடுமைகளை தடுத்த நிறுத்த கொண்டு வரப்பட்டது. இக்கொடுமைகளில் பாதிக்கப்படுவோருக்கு நிதி மற்றும் சட்ட உதவிகளும் செய்யப் படுகின்றன’ எனக் குறிப்பிட்டார்.
கடந்த நான்கு நாட்களாகவே அலுவல் பட்டியலில் குறிப்பிட்டும் எடுக்கப்படாத தேவேந்தரகுல வேளாளரின் சட்ட திருத்த மசோதா, நேற்று திடீர் என விவாதத்திற்கு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.