கேரளத்தில் காங்கிரஸை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமரவைப்பது காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் கவுரவப் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. அந்தவகையில் கேரள மாநில சட்டப்பேரவைத் தேர்தல் களம் தேசிய அரசியலிலும் கவனம் பெற்றுள்ளது.
இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி வலுவாக இருக்கும் மாநிலங்களில் கேரளமும் ஒன்று. கேரளத்தின் வயநாடு தொகுதிதான் ராகுல் காந்தியை மக்களவைக்கும் அனுப்பிவைத்தது. அந்தவகையில் ராகுல்காந்தி மீதான பிடிப்பும் கேரளத்துக்கு அதிகம்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல்காந்தி வயநாடு தொகுதியில் நின்ற தாக்கத்தால் மொத்தமுள்ள 20 தொகுதிகளில் 19 தொகுதிகளை காங்கிரஸ் கூட்டணி அள்ளியது. இதில் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் 15 எம்.பி.க்கள் கிடைத்தனர். தேசிய அளவில் காங்கிரஸுக்கு அதிக எம்.பி.க்களைக் கொடுத்த மாநிலமும் கேரளம்தான். அதனாலேயே ராகுல் காந்தி கேரள அரசியலின் மீதும் ஒருகண் வைத்துக்கொண்டே இருந்தார்.
இந்த சட்டப்பேரவைத் தேர்தலையும் ராகுல் காந்தியின் அறிவுரைப்படியே கேரள காங்கிரஸார் எதிர்கொள்கின்றனர். இதனால் கேரளத்தில் காங்கிரஸை வெற்றி பெறவைக்க வேண்டிய பொறுப்பு ராகுலுக்கே அதிக அளவில் இருக்கிறது.
அசாம், தமிழகம், மேற்கு வங்கம், கேரளம் ஆகிய 4 மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியனிலும் தேர்தல் நடந்தாலும் கேரளத்தின் கதை முற்றிலும் வேறானது. வட இந்தியாவில் ராகுல் காந்தி குடும்பத்தின் பாரம்பரியமிக்கத் தொகுதியான அமேதி, கேரளத்தின் வயநாடு ஆகிய இரு தொகுதிகளிலும் கடந்த 2019-ம் ஆண்டு போட்டியிட்டார் ராகுல் காந்தி.
பாரம்பரியமிக்க அமேதி தொகுதியில் ஸ்மிருதி ராணியிடம் தோல்வியடைந்தார் ராகுல். அப்படியான சூழலிலும் கேரளம் கைவிடவில்லை. வயநாடு மக்கள் ராகுலை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்கவைத்தனர். தொகுதிக்குள் அதிக அளவு இருக்கும் இஸ்லாமியர் வாக்குகள் ராகுலை அதிக ஓட்டு வித்தியாசத்தில் ஜெயிக்கவைத்தது.
ராகுல் வயநாட்டை தேர்ந்தெடுத்தபோதே தமிழகம், கேரளம், கர்நாடகம் மூன்று மாநிலங்களையும் தொடும் ‘டிரை ஜங்சன்’ அது. அதனால் மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸின் வளர்ச்சிக்கு ராகுல் தனிக்கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படியே கேரளத்தில் அதிகநாள்கள் சுற்றிவருகிறார் ராகுல்காந்தி. பிரதமர் நரேந்திர மோடிக்கு குஜராத் மாநிலம் பூர்வீகமாக இருந்தாலும், அவர் போட்டியிட்டு வென்ற தொகுதியான வாரணாசி உத்தரபிரதேசத்தில் இருக்கிறது. அதனால் உத்தரபிரதேச மாநிலத் தேர்தலிலும் எப்போதுமே தனிக்கவனம் செலுத்துவார் மோடி. அதேபோல் ராகுல் காந்தியும் டெல்லியில் இருந்து வந்தாலும், அவருக்கு பிரம்மாண்ட வெற்றியைக் கொடுத்தது கேரளம்தான். அதனால் அந்த மண்ணில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை மலரச் செய்யவேண்டிய பொறுப்பு இயல்பாகவே ராகுல்காந்திக்கு இருக்கிறது.
மனதால் இணையவில்லை
கேரளத்தில் காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி ஒரு அணியாகவும், எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா ஒரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர். இது தேர்தலில் பெரும் சவாலாக இருக்கும் என்பதால் ராகுல் காந்தியே தலையிட்டு கோஷ்டிகளைக் களைந்தார். அதன்பின்பு நடந்த காங்கிரஸ் யாத்திரையிலும் உம்மன்சாண்டியும், ரமேஷ் சென்னிதலாவும் சேர்ந்தே பயணித்தனர். ஆனால் அந்த இணைப்பு வெறுமனே நடிப்பாக மட்டுமே இருந்ததையும், கேரளத்தில் அணி அரசியல் ஆழமாக இருப்பதையும் சுட்டிக்காட்டித்தான் கேரளத்தின் மூத்த காங்கிரஸ் தலைவர் பி.சி.சாக்கோ வெளியேறினார். இன்னொரு புறத்தில் சீட் கிடைக்காத அதிருப்தியில் மகளிர் காங்கிரஸின் மாநிலத் தலைவி லத்திகா சுபாஸ், காங்கிரஸ் அலுவலகத்தின் வாசலிலேயே மொட்டை போட்டார். ராகுல் காந்தியின் நேரடி பார்வையில் கேரளம் இருந்தும் இதுபோன்ற உட்கட்சி அளவிலான பிரச்னைகளைக்கூட தீர்க்க முடியாதது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சறுக்கல்தான்!
மிரட்டும் சர்வே முடிவுகள்
ஐந்தாண்டுக்கு ஒருமுறை ஆட்சிமாற்றம் என்பது கேரள அரசியலில் 1982 ஆம் ஆண்டு முதலே தொடர்ந்து வருகிறது. இதனாலேயே ஆரம்பத்தில் மெத்தனமாக இருந்தது காங்கிரஸ். அதிலும் ராகுல் காந்தியின் தொடர் கேரள விஜயம் மீண்டும் ஆட்சியில் அமர்த்தும் எனக் கணக்கிட்டது காங்கிரஸ். ஆனால் தொடர்ந்து மலையாள ஊடகங்கள் வெளியிடும் கருத்துக் கணிப்புகள் கேரளத்தில் இடது ஜனநாயக முண்ணனி மீண்டும் ஆட்சியமைக்கும் எனக் கூறிவருகிறது.
தன்னை முன்னிலைப்படுத்தும் தேர்தலில் 40 ஆண்டு வரலாறு நழுவிவிடக்கூடாது என்னும் பதற்றம் ராகுல் காந்திக்கு இருக்கிறது. 2016-ம்ஆண்டு தமிழகத்தில் இரண்டாவது முறையாக ஜெயலலிதா தலைமை யிலான அதிமுக ஆட்சிக்கு வந்ததும் வரலாறு மாறியதும் அவரை பதற்றப்படுத்துகிறது.
ஆனால் ராகுலின் இந்த பதற்றம், கேரளத்தில் இருக்கும் காங்கிரஸ் தலைவர்களிடம் இல்லை. உம்மன் சாண்டிக்கு பிடிக்காததால் கழட்டிவிடப்பட்ட பூஞ்சார் தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏபி.சி.ஜார்ஜின் ஜனபக்சம் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. உட்கட்சிவிவகாரங்களில் காங்கிரஸ் கட்சி தலையீடு செய்து, தலைமைத்துவத்தையே மாற்ற நினைத்ததால் கேரள காங்கிரஸ்(எம்), எல்.டி.எப். கூட்டணிப் பக்கம் சென்றிருக்கிறது. கூட்டணிக் கட்சிகள் கைவிட்டு செல்வதைக்கூட ராகுல் காந்தியால் சமரசம் செய்ய முடியவில்லை.
ஆறுதலான தோல்வி
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தார் ராகுல் காந்தி. அமேதி தொகுதியில் தோற்று, ஆட்சிக்கும் வர முடியாத சூழலில்தான் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜிநாமா செய்தார். அந்த இக்கட்டான நேரத்தில் வயநாடு வெற்றிதான் ராகுலின் தோல்விக்கு மருந்து தடவியது. அதனால் கடவுளின் தேசம் என வர்ணிக்கப்படும் கேரளத்தை மீண்டும் காங்கிரஸின் தேசமாக்க ரொம்பவே போராடுகிறார் ராகுல்.
அவர் மீண்டும், மீண்டும் கேரளத்தையே சுற்றிவர, ‘கேரளத்தில் பாஜகவை வளரவிடாமல் தடுக்க நாங்கள் இருக்கிறோம். பாஜக இருக்கும் மாநிலங்களில் போய் ராகுல் அரசியல் செய்யட்டும்’ என வார்த்தைகளால் சுழற்றியடிக்கிறார் முதல்வர் பினராயி விஜயன்.
புதுச்சேரி யூனியனில் கடைசியாக காங்கிரஸ் ஆட்சிதான் இருந்தது. மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை மம்தா பானர்ஜி, பாஜக இடையேதான் போட்டி நிலவுகிறது. 1967 வரை தமிழகத்தில் ஆட்சிக்கட்டிலில் இருந்த காங்கிரஸ் இப்போது சுருங்கிப்போய் 25 தொகுதிகளோடு திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது.
அசாம், கேரளம் மற்றும் புதுச்சேரியில் ஆட்சியைப் பிடிக்க வேண்டிய போராட்டத்தில் இருக்கிறது காங்கிரஸ். அதிலும், கேரளத்தில் இம்முறை மீண்டும் இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) வாகை சூடிவிட்டால் ராகுல் காந்தியை முன்னிறுத்திய அரசியலுக்கான தோல்வியாக அது சுட்டப்படும்.
அதனால் காங்கிரஸை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் ராகுல். கேரள மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு கை கொடுப்பார்களா என்பதும் விரைவிலேயே தெரிந்துவிடும்.