பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற மெகா கூட்டணியின் உறுப்பினர் லாலு பிரசாத் யாதவை ஏசி, அவரது அலுவலகத்திற்கு அனாமதேய தொலைபேசிகள் வந்துள்ளன. இவை, குஜராத்தில் இருந்து செய்யப்பட்டதாகத் தெரிய வந்துள்ளதால் அவர்களை தேடி, பாட்னா போலீஸ் அங்கு செல்லவிருக்கிறது.
சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயமான கடந்த அக்டோபர் 25 ஆம் தேதி பாட்னாவின் வீர்சந்த பட்டேல் மார்க் பகுதியில் உள்ள லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் அலுவலகத்திற்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்திருக்கிறது. அதில் பேசியவர் லாலுவிடம் பேச விரும்புவதாகக் கூறியதுடன் அவரை கண்டபடி திட்டியுள்ளார். இதை தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கு வந்த பல தொலைபேசிகளில் பேசிவர்களும் லாலுவை தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இவற்றை எடுத்து பேசியவர் லாலு கட்சியின் தலைமை நிலையச் செயலாளரான சந்திரேஷ்வர் பிரசாத் சிங். இவரது புகாரின் பேரில் அதே நாளில் அடையாளம் தெரியாத நபர்கள் மீது பாட்னா போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து தொலைபேசியின் தொழில்நுட்ப விசாரணை செய்த பாட்னா போலீஸுக்கு அவை, குஜராத் மாநிலத்தில் இருந்து செல்போன்களில் பேசியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால், அவர்களை விசாரித்து நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, குஜராத் செல்கிறது பாட்னா போலீஸின் விசாரணைக் குழு. இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு தர குஜராத் போலீஸும் முன்வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து ‘தி இந்து’விடம் பேசிய பாட்னா காவல்துறை வட்டாரம் கூறுகையில், ‘அக்டோபர் 25 ஆம் தேதி வந்த இந்த தொலைபேசிகளின் எண்களை கண்டுபிடித்து வைத்திருக்கிறோம். குஜராத்தை சேர்ந்த அனைத்து செல்போன்களின் உரிமையாளர்களை பிடிக்க அம் மாநில போலீஸாரிடமும் பேசியாகி விட்டது நிதிஷ்குமாரின் முதல் அமைச்சர் பதவி ஏற்பிற்கு பின் குஜராத் கிளம்புவோம்.’ எனத் தெரிவித்தனர்.
இது தொடர்பாக உயர்மட்ட விசாரணை வேண்டும் என லாலு கோரியுள்ளார்.