பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரின் பதவி ஏற்பு விழாவில் கலந்துகொண்ட திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், மற்ற அரசியல் கட்சித்தலைவர்கள் மற்றும் மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதன்மூலம் பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் உருவாக்கப்பட உள்ள மதச்சார்பற்ற அணியில் திமுகவும் இடம் பெறும் எனத் தெரிகிறது.
பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற மெகா கூட்டணியின் சார்பில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த நிதிஷ் குமார் நேற்று முன்தினம் முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில், மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிரான கட்சித் தலைவர்கள் மற்றும் பல்வேறு மாநில முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி சார்பில் அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு ஆகியோர் இவ்விழாவில் கலந்து கொண்டனர். முதல்வராக நிதிஷ்குமார் பதவி ஏற்ற பிறகு அவருக்கு, தமிழகத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட ஏலக்காய் மாலையை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார் ஸ்டாலின்.
இத்துடன் திமுக தலைவர் கருணாநிதி கொடுத்து அனுப்பிய வாழ்த்து கடிதத்தையும் வழங்கினார். விழா மேடையில் நிதிஷ் குமாருக்கு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தவர் ஸ்டாலின் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
பதவி ஏற்பு விழா நடைபெறுவதற்கு ஒருநாள் முன்னதாகவே, சென்னையில் இருந்து விமானம் மூலம் மாலை 4.00 மணிக்கு பாட்னா வந்தடைந்த ஸ்டாலின் மவுரியா ஓட்டலில் தங்கினார். இதை அறிந்த நிதிஷ் குமார், ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்புகொண்டு, பல ஆயிரம் கி.மீ. தொலைவில் இருந்து வந்தமைக்காக நன்றி தெரிவித்தார்.
இதையடுத்து அன்று மாலையில், முன்னாள் முதல்வர் ராப்ரி தேவியின் அரசு இல்லம் சென்ற ஸ்டாலின், அவரது கணவரும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான லாலு பிரசாத் யாதவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது, பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் அனைவரும் ஒன்று கூட வேண்டியது அவசியம் என்று ஸ்டாலினிடம் லாலு வலியுறுத்தி உள்ளார். இதை ஏற்கும் வகையில், இதுதொடர்பான முயற்சிக்கு தி.மு.க. முழு ஆதரவு அளிக்கும் என ஸ்டாலின் உறுதி அளித்ததாகத் தெரிகிறது.
மேலும் முதன்முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட தனது இரு மகன்களான தேஜஸ்வி பிரசாத் யாதவ் மற்றும் தேஜ் பிரதாப் யாதவ் உட்பட தன் குடும்பத்தினர் அனைவரையும் ஸ்டாலினுக்கு அறிமுகப்படுத்தினார் லாலு.
இதைத் தொடர்ந்து பாட்னாவில் அரசு இல்லத்தில் தங்கியிருந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் சரத் யாதவையும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் ஸ்டாலின். இவருடன் சுமார் அரை மணி நேரம் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
மேலும் பதவி ஏற்பு விழா நடைபெற்ற வெள்ளிக்கிழமை காலை 11.30 மணிக்கு, ஓட்டல் மவுரியாவில் மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் ஆகியோரையும் ஸ்டாலின் சந்தித்து பேசினார். சுமார் 20 நிமிடம் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் ஒரு புதிய அணியை உருவாக்குவது குறித்து ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த சந்திப்பு குறித்து ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தமிழக அரசியல் நிலவரம் குறித்து பல தகவல்களை கேட்டறிந்தார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. தமிழகத்தில் ஆட்சியில் இல்லாதபோதும் மக்கள் பணிகளை திமுக சிறப்பாக மேற்கொள்வதாக அவர் பாராட்டினார். பிஹாரில் மதவாதத்தை எதிர்த்து உருவாக்கப்பட்ட மதச்சார்ப்பற்ற கூட்டணி பிரம்மாண்டமான வெற்றியை பெற்றது. இது தமிழகம் உட்பட மற்ற மாநிலங்களிலும் தொடரும் என எதிர்பார்க்கிறேன்” என்றார்.
பதவி ஏற்பு விழா மேடைக்கு அருகில் சிறப்பு விருந்தினர்களுக்காக தனி மேடை அமைக்கப்பட்டிருந்தது. 35 விருந்தினர்கள் அமர்ந்திருந்த இந்த மேடையின் முதல் வரிசையில் ஸ்டாலினுக்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. இவரது வலப் பக்கம் பாஜக வைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ராம் ஜெத்மலானியும், இடது புறம் பஞ்சாப் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதலும் அமர்ந்திருந்தனர். இதே மேடையில் பின் வரிசையில் டி.ஆர்.பாலுவுக்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.
இந்த விழாவுக்கு சற்று தாமதமாக வந்த காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி மேடையில் இருந்த பல அரசியல் தலைவர்களுடன் கைகுலுக்கி பேசினார். இதில் ஸ்டாலினுடனும் கைகுலுக்கிய ராகுல் சில நிமிடங்கள் நின்று பேசினார். பதவி ஏற்பு விழா முடிந்த பிறகு தனது அரசு இல்லத்தில் விருந்தினர்கள் அனைவருக்கும் தேநீர் விருந்தளித்தார் நிதிஷ். இதிலும் தேசிய அளவில் மதச்சார்பற்ற அணியை உருவாக்குவது குறித்து ஆலோசனை நடைபெற்றதால் அங்கு பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.