கேரளாவில் முதல்கட்ட உள்ளாட்சி தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் வெவ்வேறு சம்பவங்களில் 4 வாக்காளர்கள் மற்றும் வாக்குச் சாவடி முகவர் மயங்கி விழுந்து இறந்தனர்.
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம், வித்யா நகரைச் சேர்ந்தவர் சமீர் (35). இவர் வித்யா நகர் அரசு கல்லூரியில் அமைக்கப் பட்டிருந்த வாக்குச் சாவடியில் நேற்று காலை தனது தாயார் மற்றும் மனைவியுடன் சென்று வாக்களித்தார். இந்நிலையில் வீடு திரும்பியவுடன் நிலைகுலைந்து விழுந்து உயிரிழந்தார்.
இதுபோல் கொல்லத்தில் வாசுதேவன் பிள்ளை (84) என்று ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் வாக்குச் சாவடியில் இருந்து வெளியே வரும்போது, மயங்கி விழுந்து இறந்தார்.
காசர்கோடு மாவட்டம், பனத்தடி ஊராட்சியில் பாஜக வாக்குச் சாவடி முகவர் சுதீஷ் என்பவர், வாக்குச் சாவடியிலேயே நிலைகுலைந்து விழுந்து இறந்தார். இதேபோல் காசர்கோடு வட்டார காங்கிரஸ் பொதுச் செயலாளர் பத்மநாபன் (59), வாக்குச் சாவடி செல்லும் வழியில் நிலைகுலைந்து இறந்தார்.
கண்ணுரில் கொட்டூர் என்ற இடத்தில் வசித்த இவர், ஓய்வுபெற்ற கிராம அதிகாரி ஆவார். இறுதியாக, கண்ணூரில் புது மாகி என்ற இடத்தில் பி.வி.அச்சூட்டி (74) என்பவர் வாக்குச் சாவடி செல்லும் வழியில் மயங்கி விழுந்து இறந்தார். உள்ளாட்சி தேர்தலில் 5 பேர் திடீரென இறந்ததால் பெரும் பரபரப்பு நிலவுககிறது