ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்திக்கு சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கப் பிரிவு வழங்கிய நோட்டீஸுக்குத் தடை விதிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து 2019-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டபின், கடந்த ஓராண்டுக்கும் மேலாக மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி வீட்டுக் காவலில் இருந்தார். கடந்த ஆண்டு கரோனா வைரஸ் லாக்டவுனுக்கு முன்பாக வீட்டுக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்குத் தொடர்பாக விசாரித்து வரும் அமலாக்கப் பிரிவு, பிடிபி கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி நேரில் டெல்லி அலுவலகத்தில் மார்ச் 15-ம் தேதி ஆஜராக வேண்டும் என நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
அமலாக்கப் பிரிவு வழங்கிய நோட்டீஸுக்குத் தடை விதிக்கக் கோரி, பிடிபி கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி, சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இதனால் கடந்த 15-ம் தேதி அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் மெகபூபா முப்தி நேரில் ஆஜராகவில்லை.
இந்தச் சூழலில் வரும் 22-ம் தேதி மீண்டும் நேரில் ஆஜராக வேண்டும் என அமலாக்கப் பிரிவு சார்பில், மெகபூபா முப்திக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்தச் சூழலில் மெகபூபா முப்தி தாக்கல் செய்த வழக்கு, உயர் நீதிமன்ற நீதிபதி டிஎன் படேல், நீதிபதி ஜஸ்மீத் சிங் ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அமலாக்கப் பிரிவு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார்.
மெகபூபா முப்தி சார்பில் மூத்த வழக்கறிஞர் நித்யா ராமகிருஷ்ணன் ஆஜரானார்.
வழக்கறிஞர் நித்யா ராமகிருஷ்ணன் வாதிடுகையில், "மெகபூபா முப்தி நேரில் ஆஜராக வேண்டும் என அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நிர்பந்திக்கக் கூடாது. எந்தவிதமான ஆதாரங்களையும் அளிக்காமல் ஆஜராகக் கோருகிறார்கள். இது அரசியலமைப்புச் சட்டம் 20(3) பிரிவை மீறுவதாகும்" எனக் கேட்டுக்கொண்டார்.
நீதிபதிகள் டிஎன் படேல், ஜஸ்மீத் சிங், "நாங்கள் மனுதாரருக்கு எந்தவிதமான நிவாரணத்தையும் வழங்க முடியாது. அமலாக்கப் பிரிவு நோட்டீஸுக்குத் தடை விதிக்கவும் முடியாது" எனத் தெரிவித்தனர்.