மின்னணு வாக்கு இயந்திரங்களில் அரசியல் கட்சிகளின் சின்னத்தை நீக்கிவிட்டு அதற்கு மாற்றாக வேட்பாளர் பெயர், வயது, புகைப்படம், கல்வித் தகுதி ஆகியவற்றை வைக்கக் கோரிய மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், அட்டர்னி ஜெனரல், சொலிசிட்டர் ஜெனரல் கருத்தைக் கேட்டுள்ளது.
இந்த மனு தொடர்பாக எந்தவிதமான நோட்டீஸையும் மத்திய அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் அனுப்ப முடியாது எனத் தெரிவித்த உச்ச நீதிமன்றம், அட்டர்னி ஜெனரல், சொலிசிட்டர் ஜெனரல் கருத்துகளை அறிய முன்வந்துள்ளது.
இந்த மனுவைத் தாக்கல் செய்த பாஜக மூத்த தலைவரும், மூத்த வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாயே, மனுவின் ஒரு நகலை அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோருக்கு வழங்கிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயே தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
''மின்னணு வாக்கு இயந்திரங்களில் அரசியல் கட்சிகளின் சின்னத்தைப் பதிவு செய்வது சட்டவிரோதமானது, அரசியலமைப்புக்கு விரோதமானது, மீறும் செயலாகும். ஊழல் மற்றும் குற்றச்செயல்களை அரசியலில் இருந்து தடுக்க வாக்குப்பதிவு இயந்திரங்களில் கட்சியின் சின்னத்தை நீக்க வேண்டும். அதற்கு மாற்றாக, வேட்பாளரின் பெயர், வயது, கல்வித் தகுதி, புகைப்படம் ஆகியவை இடம் பெற வேண்டும்.
வாக்கு இயந்திரங்களில் அரசியல் கட்சிகளின் சின்னம் இல்லாமல் இருந்தால், ஏராளமான நன்மை இருக்கிறது. நேர்மையான, புத்திசாலியான, வேட்பாளர்களைக் கல்வித் தகுதி மூலம் அடையாளம் கண்டு வாக்காளர்கள் வாக்களிக்க முடியும்.
அரசியல் கட்சிகளின் சின்னம் இல்லாமல் வாக்கு இயந்திரம் இருக்கும்போது, கட்சிகள் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்குவதில் எதேச்சதிகார நிலையைக் கட்டுப்படுத்த முடியும், மதரீதியாக, சாதிரீதியாகச் செயல்படுவோருக்கு வாய்ப்பு வழங்குவதையும் கட்டுப்படுத்த முடியும்.
சமீபத்தில் ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், 539 எம்.பிக்களில் 43 சதவீதம் அதாவது 233 பேர் மீது அறிவிக்கப்பட்ட கிரிமினல் வழக்குகள் இருக்கின்றன. 2014-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற 542 எம்,பி.க்களின் விவரங்களை ஆய்வு செய்தபோது அதில் 34 சதவீதம், அதாவது 185 எம்.பி.க்கள் மீது கிரிமினல் வழக்குகள் இருந்தன.
2009-ம் ஆண்டில் 162 எம்.பி.க்கள் மீது கிரிமினல் வழக்குகள் இருந்தன. ஆண்டுக்கு ஆண்டு கிரமினல் குற்றப்பின்னணி கொண்டோர் எம்.பி.க்களாவது அதிகரித்து வருகிறது. இந்தநிலைக்குக் காரணம் வாக்குச்சீட்டிலும், வாக்கு இயந்திரத்திலும் கட்சிகளின் சின்னம் இருப்பதுதான்.
இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டது.
இந்த மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபன்னா, வி. ராமசுப்பிரமணியன் ஆகியோர் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் விகாஸ் சிங் ஆஜரானார்.
அப்போது, மனுதாரர் வழக்கறிஞர் விகாஸ் சிங்கிடம் நீதிபதிகள் அமர்வு, "வாக்கு இயந்திரங்களில் அரசியல் கட்சிகளின் சின்னம் இருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க என்ன காரணம் என்பதைத் தெரிந்து கொள்ளவேண்டும்" எனக் கேட்டனர்.
அதற்கு மனுதாரர் வழக்கறிஞர் விகாஸ் சிங், "வாக்கு இயந்திரங்களில் அரசியல் கட்சிகளின் சின்னம் இருந்தால் அது தேர்தலில் குற்றப் பின்னணி உள்ளவர்கள் அதிகமாக வெற்றி பெற வாய்ப்பளிக்கிறது. கட்சிகளின் சின்னம் இருப்பது அரசியலமைப்புக்கு விரோதமானது, சட்டவிரோதம்.
பிரேசில் நாட்டில் நடந்த தேர்தலில் கட்சியின் சின்னம் கிடையாது, வேட்பாளர்களின் பெயர் மட்டுமே இருந்தது. இது தொடர்பான விவரங்களை அடுத்த விசாரணையில் முழுமையாகத் தெரிவிக்கிறேன்" என்றார்.
இதைக் கேட்ட நீதிபதிகள் அமர்வு, "ஒரு அரசியல் கட்சியின் சின்னம் வாக்கு இயந்திரத்தில் இருந்தால் அது எவ்வாறு வாக்காளர்களுக்குப் பாரபட்சம் காட்டுகிறது என்பதைத் தெரிவிக்க வேண்டும். இந்த மனுவை ஏற்று நாங்கள் மத்திய அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடவில்லை. மனுதாரர், இந்த மனுவின் நகல் ஒன்றை அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபாலுக்கும், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவுக்கும் அனுப்ப வேண்டும்" என உத்தரவிட்டது.