கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட திட்டமிடப்படாத ஊரடங்கால் ஏற்பட்ட பேரழிவுகள் இன்னும் தேசத்தைப் பிடித்து ஆட்டுவிக்கின்றன என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வேதனை தெரிவித்துள்ளார்.
நாட்டில் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியதையடுத்து, கடந்த ஆண்டு மார்ச் 24-ம் தேதி லாக்டவுனை மத்திய அரசு கொண்டு வந்தது. கடுமையான கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்பட்ட நிலையில் ஜூன் மாதத்திலிருந்து படிப்படியாக லாக்டவுன் நடவடிக்கைகள் தளர்த்தப்பட்டன.
மத்திய அரசு லாக்டவுன் நடவடிக்கையைக் கொண்டுவந்தபோது, திட்டமிடாமல் லாக்டவுனைக் கொண்டுவந்துவிட்டது, பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சித்தார்.
அவ்வப்போது கரோனா வைரஸ் பரவல் தொடர்பாகப் புள்ளிவிவரங்களுடன் கூடிய வரைபடங்களையும் ட்விட்டரில் வெளியிட்டு மத்திய அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டி வந்தார்.
மத்திய அரசு கொண்டுவந்த திட்டமிடப்படாத லாக்டவுனால், ஏழைகள், நடுத்தரக் குடும்பங்கள், சிறு, குறு தொழில்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு நேரடியாக மத்திய அரசு நிதியுதவி அளிக்க வேண்டும், ஏழைகளின் கைகளில் நிதியுதவியை நேரடியாக அளிக்க வேண்டும், உணவு தானியங்களை இலவசமாக வழங்கிட வேண்டும் என்று ராகுல் காந்தி தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
இந்நிலையில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு கொண்டு வந்த லாக்டவுனால், பச்சிளங் குழந்தைகள் இறப்பும், பிரசவத்தில் குழந்தைகள் இறப்பதும் அதிகரிக்கும் என்று யுனிசெஃப் வெளியிட்ட அறிக்கையைச் சுட்டிக்காட்டி ராகுல் காந்தி வேதனையுடன் ட்விட்டரில் பதிவிட்டு, மத்திய அரசை விமர்சித்துள்ளார்
ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், "கரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காகக் கொண்டுவரப்பட்ட திட்டமிடப்படாத லாக்டவுனால் ஏற்பட்ட பேரழிவுகள் நாட்டை பேய் போல் பிடித்து ஆட்டுகின்றன. மத்திய அரசின் இயலாமை மற்றும் தொலைநோக்குப் பார்வையின்மையால் தண்டிக்கப்பட்ட லட்சக்கணக்கான குடும்பங்களின் விவரிக்க முடியாத வேதனைக்கு நான் இரங்கல் தெரிவிக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்ட இணைப்பில், தெற்கு ஆசியாவில் உள்ள 6 முக்கிய நாடுகளில் இந்தியாவில்தான் கரோனாவால் பச்சிளங் குழந்தைகள் உயிரிழப்பும், பிரசவத்தின்போது குழந்தைகள் இறப்பும் அதிகமாக இருக்கிறது என்ற யுனிசெஃப் நடத்திய ஆய்வின் முடிவு உள்ளது.