கும்மனம் ராஜசேகரன், ஷோபா சுரேந்திரன், கிருஷ்ணதாஸ் 
இந்தியா

கேரள தேர்தல் களம்: திருவனந்தபுரத்தில் கால்பதிக்க முனையும் பாஜக: முக்கிய தலைவர்கள் போட்டி

செய்திப்பிரிவு

கேரளாவில் பாஜகவுக்கு வலுவான வாக்கு வங்கியுள்ள திருவனந்தபுரம் மாவட்டத்தில் அக்கட்சி முக்கிய பிரமுகர்களை களமிறக்கியுள்ளது.

கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. கேரளாவில் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும்தான் கடுமையான போட்டி இருந்து வருகிறது. பாஜக தனித்து போட்டியிடுகிறது.

2016-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இதே கூட்டணி களம் கண்டன. ஆனால் இடதுசாரி கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் உள்ள வலிமை மிக்க ஈழவ சமூகம் சார்ந்த அரசியல் அமைப்பான பாரத் தர்ம ஜனசேனாவுடன் கூட்டணி வைத்து பாஜக போட்டியிட்டது. 15.8 சதவீத வாக்குகளுடன், ஓரிடத்தில் பாஜக வென்றது.

கேரளாவில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் இடையே மட்டுமே இதுவரை நேரடி போட்டி நிலவும் நிலையில் இந்த முறை தனது வாக்கு வங்கியை காண்பிக்கும் நோக்குடன் பாஜகவும் களமிறங்கியுள்ளது.

நடிகர் கிருஷ்ணகுமார்- கோப்புப் படம்

பாஜகவுக்கு வலுவான வாக்கு வங்கியுள்ள திருவனந்தபுரம் மாவட்டத்தில் அக்கட்சி முக்கிய பிரமுகர்களை களமிறக்கியுள்ளது. இதன் மூலம் அங்கு ஒரு சில இடங்களில் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை கொண்டுள்ளது.

திருவனந்தபுரம் மாவட்டத்தில் பாஜக ஏற்கெனவே வெற்றி பெற்ற நேமம் தொகுதியில் மூத்த தலைவர் கும்மனம் ராஜசேகரன் போட்டியிடுகிறார். களக்கூட்டம் தொகுதியில் ஷோபா சுரேந்திரன், கட்டக்கடா தொகுதியில் முன்னாள் தலைவர் கிருஷ்ணதாஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். திருவனந்தபுரம் மத்தி தொகுதியில் நடிகர் கிருஷ்ணகுமார் போட்டியிடுகின்றார்.

வட்டியூர் காவூ தொகுதியில் மாநகராட்சி கவுன்சிலர் ராஜேஷ், சிரையங்கில் தொகுதியில் கவுன்சிலர் ஆஷா நாத், அருவிக்கரா தொகுதியில் மாநில செயலாளர் சிவன்குட்டி, பாரசாலா தொகுதியில் மாநில செயலாளர் கரமனா ஜெயன், நெய்யாற்றங்கரா தொகுதியில் ஓட்டல் அதிபர் ராஜசேகரன் நாயர், ஆற்றின்கல் தொகுதியில் மாநில பொதுச்செயலாளர் சுதீர் போட்டியிடுகின்றனர்.

நெடுமங்காடு தொகுதியில் மற்றொரு மூத்த தலைவர் பத்மகுமாரும், கோவலம் தொகுதியில் கேரள காமராஜ் காங்கிரஸ் தலைவர் விஷ்ணுபுரம் சந்திரசேகரன் கோவளம் தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார்.

வாமனபுரம் மற்றும் வர்கலா தொகுதி கூட்டணிக் கட்சியான பாரத் தர்ம ஜனசேனாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திருவனநதபுரம் மாவட்டத்தில் பாஜக கணிசமான வாக்குகளை பெற்றுள்ளது. எனவே இந்த தொகுதிகளில் இந்த முறை கூடுதல் கவனம் செலுத்துகிறது.

SCROLL FOR NEXT