இந்தியா

ரூ. 241 கோடி வரி ஏய்ப்பு: கேட்பரி நிறுவனம் மீது சிபிஐ வழக்கு

செய்திப்பிரிவு

சாக்லெட் பிராண்டுகளில் மிகவும் புகழ்பெற்ற கேட்பரி நிறுவனம் ரூ. 241 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

இமாச்சலப் பிரதேச மாநிலம் பட்டி எனுமிடத்தில் ஆலை அமைப்பது தொடர்பாக உண்மைக்கு மாறான தகவல்களை அளித்து வரிச் சலுகை பெற்றது தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக ஹரியாணா மாநிலம் மற்றும் இமாச்சலப் பிரதேச மாநிலங்களில் இந்நிறுவனத்தின் 5 ஆலைகளில் சோதனை நடத்தி ஆவணங்களை சிபிஐ கைப்பற்றியுள்ளது.

மத்திய உற்பத்தித் துறை அதிகாரிகளின் ஒத்துழைப்போடு ரூ.241 கோடி அளவுக்கு வரிச் சலுகையை இந்நிறுவனம் பெற்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த முறைகேடுகள் 2009-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நிகழ்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் இந்நிறுவனம் உற்பத்தித் துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து தவறான ஆவணங்களை தயாரித்துள்ளது. ஆவணங்களில் முறைகேடாக மாற்றங்கள் செய்து பிராந்திய அடிப்படையில் கிடைக்கும் சலுகைகளை (உற்பத்தி வரி மற்றும் வருமான வரி சலுகை) இந்நிறுவனம் பெற்றுள்ளது. ஆனால் உண்மையில் பிராந்திய அடிப்படையில் சலுகைகளைப் பெறுவதற்கு இந்நிறுவனம் தகுதியானதல்ல என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

2007-ம் ஆண்டு இமாச்சலப் பிரதேச மாநிலம் பட்டி எனுமிடத்தில் ஆலை அமைத்து 10 ஆண்டுகளுக்கு உற்பத்தி வரி மற்றும் வருமான வரிச் சலுகை பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளது. ஆனால் புதிய ஆலை அமைக்காமல் ஏற்கெனவே உள்ள ஆலையில் விரிவாக்கம் செய்து வரிச் சலுகையைப் பெற்றுள்ளது. ஆனால் வரிச் சலுகை பெற்ற ஆலையானது 2005-ம் ஆண்டு நிறுவப்பட்டதாகும். இந்த ஆலையானது போர்ன்விடா தயாரிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டதாகும்.

2010-ம் ஆண்டு ஜூலை மாதம் வரிச் சலுகை பெறுவதற்காக லைசென்ஸ் பெற்றுள்ளது. ஆனால்இரண்டாவது பிரிவானது வரிச்சலுகை பெறுவதற்கான தகுதி வரையறையை பெற்றிருக்கவில்லை. மாறாக உற்பத்தித்துறை அதிகாரி நிர்மல் சிங் மற்றும் ஜஸ்பிரீத் கவுருக்கு ஒரு இடைத்தரகர் மூலமாக லஞ்சம் அளித்து ரூ. 241 கோடி அளவுக்கு வரிச் சலுகை பெற்றுள்ளது என சிபிஐ குறிப்பிட்டுள்ளது.

இந்த வரிச் சலுகையைப் பெறுவதற்காக நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் இருந்த சில உறுப்பினர்கள் மற்றும் சில மேலாளர்கள் கூட்டாக ஆவணங்களில் திருத்தங்களை செய்துள்ளனர். நிறுவன ஆவணங்களை பரிசீலித்ததில் இத்தகைய மோசடிகள் செய்துள்ளது தெரிய வந்துள்ளதாக சிபிஐ குறிப்பிட்டுள்ளது.

SCROLL FOR NEXT