உத்தராகண்ட் புதிய முதல்வராக தீரத் சிங் ராவத் சமீபத்தில் பதவியேற்றார். கடந்த 16-ம் தேதி டேராடூனில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசும்போது, “இப்போதைய இளைஞர்கள் அறியாமை காரணமாக வேண்டுமென்றே கிழிக்கப்பட்ட ஜீன்ஸ்களை அணிகின்றனர். சில பெண்களும் இதைப் பின்பற்றுகின்றனர். ஒரு முறை விமானத்தில் நான் பயணம் செய்தபோது, எனக்கு அருகில் அமர்ந்திருந்த ஒரு பெண் முழங்காலில் கிழிக்கப்பட்ட ஜீன்ஸ் மற்றும் கைகளில் வளையல் அணிந்திருந்தார். அவருடன் 2 குழந்தைகளும் பயணித்தனர். தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் அவர், சமூகத்தில் பல்வேறு தரப்பினரை சந்திக்கிறார். இவர் கிழிந்த ஜீன்ஸ் அணிவதன் மூலம் சமுதாயத்துக்கு, குழந்தைகளுக்கு என்ன தகவலை கூற விரும்புகிறார் என்றே தெரியவில்லை. நாம் செய்வதைத்தான் குழந்தைகளும் பின்பற்றுவார்கள்” என்றார்.
இவரது இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக பெண்கள் சிலர் கிழிந்த ஜீன்ஸ்களை அணிந்த தங்கள் புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டு முதல்வருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.