இந்தியா

உத்தரபிரதேசத்தில் முஸ்லிம்களின் விடியல் தொழுகைக்காக ஒலிக்கப்படும் 'பாங்கு' முழக்கத்தை தடை செய்ய வேண்டும்: அலகாபாத் பல்கலை. துணைவேந்தர் மனுவால் சர்ச்சை

ஆர்.ஷபிமுன்னா

உத்தரபிரதேசத்தில் முஸ்லிம்களின் விடியல் தொழுகைக்கு ஒலிக்கப்படும் ‘பாங்கு’ முழக்கத்துக்கு தடை விதிக்கக் கோரி, அலகாபாத் பல்கலைக்கழக துணைவேந்தர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவால் சர்ச்சை எழுந்துள்ளது.

உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் தினமும் 5 வேளை தொழுவதை தங்களுடைய முக்கிய கடமையாகக் கொண்டுள்ளனர். இந்தத் தொழுகைக்கு சற்று முன்பாக அவர்களுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் மசூதிகளில் பாங்கு ஓசை ஒலிப்பது நீண்ட காலமாக தொடர்கிறது. இதில்,முதல் தொழுகையாக விடியலில் சூரியன் உதயமாகும் நேரத்திலும் மசூதிகளின் ஒலிப்பெருக்கியில் பாங்கு ஒலிக்கப்படுகிறது.

அப்போது, உறங்கிக் கொண்டிருக்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு அந்த ஒலி தொல்லை தருவதாக அவ்வப்போது சிலரிடமிருந்து புகார்கள் எழுவது உண்டு.கடைசியாக பாலிவுட் பாடகரான சோனு நிகாம் மும்பையில் இப்பிரச்சினையை எழுப்பியது சர்ச்சையானது. எனினும், இதுபோன்ற புகார்களில் இதுவரை எங்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இச்சூழலில், அலகாபாத் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சங்கீதா வாத்ஸவா, விடியலின் பாங்கு முழக்கத்துக்கு தடை விதிக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் பானுசந்த் கோஸ்வாமியிடம் மனு அளித்துள்ளார். தங்கள் குடியிருப்பு பகுதியில் எழும் இந்த பாங்கு ஒலியால், தனது உறக்கம் கெடுவதுடன் அதன் தாக்கம் தனது உடல்நலத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் தான் எந்த ஒரு மதம் அல்லது பிரிவுக்கும் எதிரானவர் அல்ல எனவும், விடியலின் பாங்கை மட்டும் ஒலிப்பெருக்கி இல்லாமல் அளித்தால் நல்லது எனவும் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

இதனால் சர்ச்சை கிளம்பியுள்ளது. இதை அறிந்த அலகாபாத் பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதி மாணவர்கள், துணைவேந்தரின் கொடும்பாவியை எரித்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காங்கிரஸின் உ.பி. மாநில மாணவர் பிரிவு தலைவரான அகிலேஷ் யாதவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT