ஆந்திராவில் தெலுங்கு தேசம் ஆட்சியின்போது, அமராவதியில் புதிய தலைநகரை உருவாக்க முடிவு செய்யப்பட்டது. இததற்காக விஜயவாடா-குண்டூர் இடையே உள்ள விவசாயிகளிடமிருந்து சுமார் 34 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதில், சில விவசாயிகளை மிரட்டி நிலம் கையகப்படுத்தியதாக மங்களகிரி சட்டப்பேரவை உறுப்பினர் ராமகிருஷ்ணா ரெட்டி புகார் கொடுத்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், சந்திரபாபு நாயுடு, முன்னாள் அமைச்சர் நாராயணா உட்பட 8 பேர் மீது சிஐடி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இது தொடர்பாக வரும் 23-ம் தேதி விஜயவாடாவில் உள்ள சிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டுமென சந்திரபாபு நாயுடுவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதுபோல வரும் 22-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு முன்னாள் அமைச்சர் நாராயணாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்நிலையில், சந்திரபாபு நாயுடு சார்பில் ஆந்திர உயர் நீதிமன்றத்தில் நேற்று ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “அரசாணை மீது விசாரணை நடத்தும் உரிமை சிஐடி போலீஸாருக்கு இல்லை. இவ்வழக்கில் எவ்விதத் தொடர்பும் இல்லாத சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்தது செல்லாது என்பதால், வழக்கை வாபஸ் பெற சிஐடி-க்கு உத்தரவிட வேண்டும்” என கூறப்பட்டுள்ளது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது.