கேரள முதல்வர் பினராயி விஜயன் போட்டியிடும் தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிட முடியாது என காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சுதாகரன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 6ம் தேதி கேரளத்தில் தேர்தல் நடக்க உள்ளது. கேரள வடக்கு கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தர்மடம் தொகுதியில் தற்போதைய முதல்வர் பினராயி விஜயன் போட்டியிடுகிறார். அந்தத் தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிட காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை உறுப்பினருமான கே.சுதாகரன் தேர்வு செய்யப்பட்டார்.
கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் முல்லபள்ளி ராமசந்திரன் கூறுகையில், முதல்வர் பினராயி விஜயனை எதிர்த்து கண்ணூர் மக்களவை உறுப்பினர் போட்டியிட வேண்டும் என்று கட்சியும், தலைமையும் விரும்புவதாகத் தெரிவித்தார்.
ஆனால், தர்மடம் தொகுதியில் முதல்வர் பினராயி விஜயனை எதிர்த்து போட்டியிட முடியாது என கே.சுதாகரன் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறும்போது, ‘தர்மடம் தொகுதியில் பினராயி விஜயனை எதிர்த்து போட்டியிட என்னை தேர்வு செய்ததை வரவேற்கிறேன், அதற்கு நன்றியும் தெரிவிக்கிறேன். ஆனால், இந்தத் தொகுதியில் சூழல் எனக்குச் சாதகமாக இல்லை. மேலும் தேர்தலுக்கு முன் செய்ய வேண்டிய அடிப்படை வேலைகளுக்குப் போதிய கால அவகாசம் இல்லை. எனவே தேர்வு பட்டியலிலிருந்து தன்னை நீக்குமாறு அனைத்திந்திய காங்கிரஸ் காங்கிரஸ் கமிட்டி, கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டியிடம் கூறியிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
கேரளத்தில் ஆட்சியைப் பிடிக்க பாஜக தீவிரமாக உள்ள நிலையில், பினராயி விஜயனுக்கு எதிராக வலுவான வேட்பாளரை நிறுத்த காங்கிரஸ் திட்டமிட்டிருந்தது. இந்நிலையில் தேர்வு செய்யப்பட்ட கே.சுதாகரன் பின்வாங்கியது காங்கிரஸுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.