ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் கோரி முன்னாள் ராணுவ வீரர்கள் போராடி வந்த நிலையில், தற்போது இதே கோரிக்கையை வலியுறுத்தி முன் னாள் துணை ராணுவப் படையினர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
மத்திய ரிசர்வ் போலீஸ், எல்லை பாதுகாப்பு படை, இந்தோ திபெத் எல்லை போலீஸ், மத்திய தொழில் பாதுகாப்பு படை, சஷாஸ்த்ரா சீமா பால் ஆகிய துணை ராணுவப் படைகளில் பணியாற்றி ஓய்வுபெற்ற சுமார் 300 பேர், டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நேற்று தர்ணா செய்தனர்.
இதுகுறித்து அகில இந்திய மத்திய துணை ராணுவப் படைகள் மற்றும் ஓய்வுபெற்றோர் நலச் சங் கத்தின் தேசிய பொதுச் செயலாளர் பி.எஸ்.நாயர் கூறும்போது, “பாது காப்பு பணியில் ராணுவத்தினர் சந்திக்கும் அனைத்து பிரச்சினை களையும் நாங்களும் சந்திக் கிறோம். முன்னாள் ராணுவ வீரர் களுக்கு அறிவித்துள்ளது போல் எங்களுக்கும் ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் வழங்க வேண்டும். தற் போது பணியாற்றி வருவோருக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
மேலும் முன்னாள் ராணுவ வீரர் களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் எங்களுக்கும் வழங்க வேண்டும் என்பது எங்கள் முக்கிய கோரிக்கை. எங்களது சிரமங்களை அரசுக்கு தெரிவிக்கவும், கோரிக் கைகளை முன்வைக்கவும் போராட்டம் தொடங்கியுள்ளோம். பல்வேறு மாநிலங்களின் பிரதி நிதிகள் இதில் பங்கேற்றுள்ள னர். வரும் 4-ம் தேதி வரை எங்கள் போராட்டம் தொடரும்” என்றார்.
சங்கத்தின் தலைவர் ஆர்.பி.பதக் கூறும்போது, “அரசிடம் இருந்து சாதகமான பதில் வராவிட்டால் வரும் நாட்களில் எங்கள் போராட் டத்தை தீவிரப்படுத்துவோம். அடுத்த ஆண்டு மிகப்பெரிய பேரணி நடத்துவோம்” என்றார்.
“10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ‘உரிமைக்கான போர்’ என்ற இந்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளோம். மத்திய ஆயுத போலீஸ் படைகள் என்ற பொது அடையாளப் பெயரில் நாங்கள் அழைக்கப்படுகிறோம். இதனை மத்திய துணை ராணுவப் படைகள் என்று மாற்ற வேண்டும் என்பதும் எங்கள் கோரிக்கைகளில் அடங்கும். எங்கள் கோரிக்கைகள் குறித்து அரசிடம் அளித்த மனுவுக்கு பதில் வராததால் போராட்டத்தில் குதித்துள்ளோம்” என்றும் அவர்கள் தெரிவித்தனர்.