பிஹாரில் ராஷ்ட்ரிய ஜனதா தள சட்டமன்றக் கட்சித் தலைவராக தலைவராக லாலுவின் இளைய மகன் தேஜஸ்வீ பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்பு நிலவுகிறது.
கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான அதிகாரம் லாலுவிடம் அளிக்கப்பட்டுள்ளது.
மெகா கூட்டணியின் முக்கிய உறுப்பினராக பிஹாரின் 243-ல் 101 தொகுதிகளில் போட்டியிட்டது லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம். இதில், வென்ற 80 எம்.எல்.ஏக்களின் முதல் கூட்டம் நேற்று பாட்னாவில் நடைபெற்றது.
பிஹாரின் முன்னாள் முதல்வரும், தன் மனைவியுமான ராப்ரி தேவியுடன் லாலுவும் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் அதன் தலைவராக யாரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இதன் மீதான எந்த ஒரு விவாதமும் நடத்தப்படாமல் அதற்கான அதிகாரம், கட்சியின் தலைவரான லாலுவிடம் அளிக்கப்பட்டது.
இது குறித்து 'தி இந்து'விடம் அக்கட்சி எம்.எல்.ஏக்கள் வட்டாரம் கூறுகையில், "எங்கள் தலைவராக தன் இளய மகனை தேர்ந்தெடுக்க முடிவு செய்துவிட்டார் லாலுஜி. ஆனால், அவரது மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவும் முதன் முறையாக சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் அவரது குடும்பத்தினர் அவருக்கு ஆதரவாகவும் உள்ளனர். இதனால், கட்சியின் மூத்த எம்.எல்.ஏக்களிடமும் தனியாக அழைத்து பேசிய பின் அதற்கான அறிவிப்பை தாமதமாக வெளியிடுவார் என எண்ணுகிறோம்'' எனக் கூறுகின்றனர்.
இந்த முறை வென்ற லாலுவின் கட்சி எம்.எல்.ஏக்களில் 44 பேர் முதன்முறையாக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். இவர்கள் அனைவரும் தேஜஸ்வீக்கு ஆதரவாக இருப்பதால் அவர் தலைவராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், தனது குடும்பத்தினரை சமாளிக்க வேண்டி இருப்பதால், இன்று சனிக்கிழமை காலை கூடிய இரண்டாவது கூட்டத்திலும் இதற்கான அறிவிப்பை லாலு அளிக்கவில்லை.