உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான அமைச்சரவை நேற்று மாற்றி அமைக்கப்பட்டது. இதில் 12 புதிய முகங்களுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. மேலும் அமைச்சரவையில் ஏற்கெனவே இடம்பெற்றிருந்த 8 பேருக்கு பதவி உயர்வு தரப்பட்டுள்ளது.
புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா லக்னோ ராஜ்பவனில் நேற்று நடைபெற்றது. இதில் 5 கேபினட் அமைச்சர்கள், 8 தனிப் பொறுப்பு டன் கூடிய இணை அமைச்சர்கள், 7 இணை அமைச்சர்கள் பொறுப் பேற்றுக் கொண்டனர். இவர்களுக்கு ஆளுநர் ராம் நாயக் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
விழாவில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், முதல்வர் அகிலேஷ், அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
பஞ்சாபில் அகாலி தளம் கட்சியை விட்டு விலகிய பல்வந்த் சிங் ரமூவாலியா (74), உ.பி. கேபினட் அமைச்சராக நேற்று பதவியேற்றார். இது பலரது புருவங்களை உயரச் செய்தது. இவர் மத்தியில் எச்.டி.தேவகவுடா தலைமையிலான ஐக்கிய முன்னணி ஆட்சியில் தொழிலாளர் துறை அமைச்சராக பதவி வகித்தவர் ஆவார்.
உ.பி.யில் 2012-ல் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தபின் மேற்கொள்ளப்படும் 6-வது அமைச் சரவை மாற்றம் இது. அகிலேஷ் யாதவின் கடந்த 43 மாத கால ஆட்சியில் அமைச்சர்கள் பலர் திறம்பட செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் சிலர் மீது ஊழல் புகாரும் எழுந்தது.
இந்நிலையில் அகிலேஷ் கடந்த வியாழக்கிழமை 8 அமைச்சர்களை பதவி நீக்கினார். மேலும் மூத்த அமைச்சர் ராஜா பய்யா உட்பட 9 அமைச்சர்களின் இலாகாக்களை பறித்தார். 2017 சட்டப்பேரவை தேர்தலை மனதில் கொண்டு அமைச்சரவையில் முக்கிய மாறுதலை அகிலேஷ் செய்திருப் பதாக கூறப்படுகிறது. -பிடிஐ