இந்தியா

59 மாணவர்களுக்கு கரோனா உறுதி; மணிப்பால் தொழில்நுட்ப பல்கலை மூடல்: கோவிட் தொற்று மண்டலமாக அறிவிப்பு

செய்திப்பிரிவு

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மணிப்பால் தொழில்நுட்ப பல்கலைக்கழக்தில் 59 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பல்கலை மூடப்பட்டது.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவில் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மார்ச் இறுதியில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல் செய்யப்பட்டது.

எனினும் மக்களின் வாழ்வாதாரம், நாட்டின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு கடந்த ஜூன் முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்டது. இதன்பின் கடந்த செப்டம்பரில் வைரஸ் பரவல் உச்சத்தை தொட்டது. அப்போது நாளொன்றுக்கு 90,000 முதல் ஒரு லட்சம் பேருக்கு தொற்று ஏற்பட்டது.

அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் வைரஸ் பரவல் படிப்படியாக குறைந்து வந்தது. ஆனால் கடந்த பிப்ரவரிமுதல் மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

நாட்டின் சில மாநிலங்களில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி முக்கிய ஆலோசனை நடத்தினார்.

மற்ற பல நாடுகளில் ஏற்பட்டுள்ளதை போல இந்தியாவில் கரோனாவின் இரண்டாம் அலை உருவாகுவதை தடுத்து நிறுத்த அனைத்து மாநில அரசுகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என பிரதமர் மோடி கூறினார்.

இந்தநிலையில் மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, குஜராத், தமிழகம் ஆகிய மாநிலங்களில் கோவிட் தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கிறது. கர்நாடகா மாநிலத்திலும் தினசரி பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அங்கு கடந்த 24 மணிநேரத்தில் கரோனா பரவல் 1135 ஆக உயர்ந்துள்ளது.

இதனையடுத்து முக்கிய நகரங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கரோனா பரவலை தடுக்க முழு வீச்சில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள மணிப்பால் தொழில்நுட்ப பல்கலைக்கழக்தில் 59 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பல்கலை மூடப்பட்டது. மாணவர்கள் தங்கும் விடுதியும் மூடப்பட்டுள்ளது.

அனைவருக்கும் கரோனா சோதனை நடத்தப்பட்டு வருகிறது. பாதிப்புள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். இதையடுத்து மணிப்பால் பல்கலை பகுதியே கரோனா தொற்றுள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT