சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயதைச் சேர்ந்த பெண்கள் வழிபாடு செய்ய அனுமதி அளித்த தீர்ப்பை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் அளிக்கும் இறுதித் தீர்ப்புக்குப் பின் கேரள அரசு உரிய முடிவெடுக்கும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயதைச் சேர்ந்த பெண்களும் வழிபடலாம் எனக் கூறி 2018-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து சபரிமலைக்கு அனைத்து வயதைச் சேர்ந்த பெண்களை அனுமதிக்கக் கேரள அரசு முடிவு செய்தது.
ஆனால், சபரிமலையில் 10 வயதுக்குள் 60 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மட்டுமே வழிபாடு செய்யலாம் என்று பாரம்பரியமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருவதால், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குக் கேரள மாநிலத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கேரள அரசு தீவிரமாக நடைமுறைப்படுத்தியபோது பல்வேறு குழப்பங்களும், போராட்டங்களும், சலசலப்புகளும் ஏற்பட்டன. இதனால், கடந்த ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜையின்போது 10 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
இந்நிலையில் கேரளாவில் வரும் ஏப்ரல் 6-ம் தேதி 140 தொகுதிகளுக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கும் விவகாரம் விஸ்வரூபம் எடுக்கும் எனப் பேசப்பட்டது.
இந்த விவகாரத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு என்ன என்று பாஜக, காங்கிரஸ் கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன.
தாங்கள் ஆட்சிக்கு வந்தால், சபரிமலை ஐயப்பன் கோயில் பாரம்பரியம் பாதுகாக்கப்படும் என்று கேரள காங்கிரஸ் கட்சி பிரச்சாரம் செய்து வருகிறது. இந்துக்களுக்கு எதிரான கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் என பாஜக பிரச்சாரம் செய்து வருகிறது.
இந்தச் சூழலில், மலப்புரம் மாவட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தபோது, சபரிமலை விவகாரத்தில் ஆளும் இடதுசாரி கூட்டணியின் நிலைப்பாடு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பினராயி விஜயன் பதில் அளிக்கையில், "சபரிமலை விவகாரத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அனைத்தும் சுமுகமாகச் செல்கிறது. இப்போதுள்ள சூழலில் சபரிமலை விவகாரத்தைப் பற்றிப் பேச வேண்டியதில்லை.
சட்டப்பேரவைத் தேர்தல் வந்துள்ள நிலையில், இப்போதுதான் சபரிமலை விவகாரத்தைச் சிலர் எழுப்புகிறார்கள். அதன் நலன்மீது அக்கறையுடன் பேசுகிறார்கள். அவர்களின் நோக்கம் தெளிவாக இருக்கிறது. உள்ளாட்சித் தேர்தலின்போதும் இந்த விவகாரத்தை எழுப்பினர்.
சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது குறித்து உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழகில் இறுதித்தீர்ப்பு வந்தபின், சபரிமலை கோயிலோடு தொடர்புடைய முக்கியஸ்தர்களுடன் முறைப்படி கலந்து பேசி, அவர்களின் கருத்துகளை அறிந்தபின் அரசு முடிவு எடுக்கும். ஆனால், இப்போதே எந்தவிதமான முடிவையும் தெரிவிக்க இயலாது.
35 இடங்களில் வென்றால்கூட ஆட்சி அமைப்போம் என்று பாஜக தலைவர் ஆர்.பாலசங்கர் பேசியதைக் கேட்டேன். பாஜக - சிபிஎம் இடையே தேர்தல் உடன்பாடு இருப்பதான குற்றச்சாட்டைத் திட்டவட்டமாக மறுக்கிறேன்.
உண்மையில் பாஜகவின் "பி" டீம் காங்கிரஸ் கட்சிதான். பல மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெல்கிறது. ஆனால், எம்எல்ஏக்கள் பாஜகவில் சேர்ந்துவிடுகிறார்கள். அவர்களின் நோக்கம் தெளிவாக இருக்கிறது. காங்கிரஸ் கட்சிதான் பாஜகவின் பி டீம்''.
இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்தார்.