கேரளாவில் தாமரை மலர்ந்தே தீரும் என திருச்சூர் தொகுதியில் போட்டியிடும் நடிகர் சுரேஷ் கோபி கூறினார்.
கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. கேரளாவில் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும்தான் கடுமையான போட்டி இருந்து வருகிறது. பாஜக தனித்து போட்டியிடுகிறது.
2016-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இதே கூட்டணி களம் கண்டன. ஆனால் இடதுசாரி கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் உள்ள வலிமை மிக்க ஈழவ சமூகம் சார்ந்த அரசியல் அமைப்பான பாரத் தர்ம ஜனசேனாவுடன் கூட்டணி வைத்து பாஜக போட்டியிட்டது. 15.8 சதவீத வாக்குகளுடன், ஓரிடத்தில் பாஜக வென்றது.
கேரளாவில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் இடையே மட்டுமே இதுவரை நேரடி போட்டி நிலவும் நிலையில் இந்த முறை தனது வாக்கு வங்கியை காண்பிக்கும் நோக்குடன் பாஜகவும் களமிறங்கியுள்ளது.
கேரள மாநிலத்தில் மொத்தமுள்ள 140 தொகுதிகளில் பாஜக 115 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மீதமுள்ள 25 இடங்களில் 4 கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றன.
கேரள பாஜக தலைவர் சுரேந்திரன் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். மஞ்சேஸ்வரம் மற்றும் கோனி தொகுதிகளில் களமிறங்குகிறார். பாலக்காடு-மெட்ரோமென் ஸ்ரீதரன், நேமம்- கும்மன் ராஜசேகரன், திருச்சூர்- நடிகர் சுரேஷ் கோபி உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
நடிகர் சுரேஷ் கோபி இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கேரள வாக்காளர்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். இடதுசாரி, காங்கிரஸ் ஆட்சிக்காலங்களில் மாநிலம் பெருமளவு பின் தங்கி விட்டது. தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்தப்படவில்லை. எனவே புதிய ஆட்சியை விரும்புகிறார்கள். பாஜக அவர்களின் விருப்பத்தை ஈடு செய்யும். கேரளாவில் தாமரை மலர்ந்தே தீரும்.
எனது உடல்நிலை காரணமாக இந்த தேர்தலில் நான் போட்டியிட விரும்பவில்லை. ஆனால் தேர்தலில் போட்டியிடுமாறு கட்சித் தலைமை வற்புறுத்தியது. பிரதமர் மோடியின் விருப்பத்தின் பேரில் நான் திருச்சூர் தொகுதியில் போட்டியிடுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.