இந்தியா

குர்ஆனின் 26 வசனங்களை நீக்க மனு அளித்த வசீம் ரிஜ்வீயை தனிமைப்படுத்திய குடும்பத்தார்

ஆர்.ஷபிமுன்னா

குர்ஆனின் 26 வசனங்களை நீக்கஉச்ச நீதிமன்றத்தில் மனு அளித்தமையால் வசீம் ரிஜ்வீயை குடும்பத்தாரே ஒதுக்கி வைத்துள்ளனர்.

உத்தரபிரதேசத்தின் ஷியா வக்பு வாரிய முன்னாள் தலைவர் வசீம் ரிஜ்வீ, குர்ஆனின் 26 வசனங்களை நீக்க உத்தரவிட கோரி,உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இதனால், நாடுமுழுவதிலும் உள்ள முஸ்லிம்களிடம் எதிர்ப்பு வலுக்கிறது. அவருக்கு‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. பாஜக உள்ளிட்ட மற்றசில அரசியல் கட்சிகளின் தலைவர்களும் ரிஜ்வீயுடனான நட்பை முறித்துக் கொண்டுள்ளனர். அனைத்து சமூகத்தினராலும் விலக்கப்பட்டுள்ள ரிஜ்வீயை அவரது குடும்பத்தாரும் தற்போது ஒதுக்கி உள்ளனர்.

இதுகுறித்து ஒரு ரிஜ்வீ வெளியிட்டுள்ள ஒரு வீடியோ பதிவில் கூறுகையில், ‘‘நான் உச்ச நீதிமன்றத்தில் அளித்த மனுவின் காரணமாக என்னிடம் மனைவி, குழந்தைகள், சகோதரர்கள் எனஅனைவரும் உறவை துண்டித்துக் கொண்டனர். இதனால், நான் சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளேன். அதைப் பற்றி கவலை இல்லை. நான் எடுத்தமுடிவுகளுக்காக எனது கடைசி மூச்சு வரை போராடுவேன். தற்கொலை செய்யும் சூழல் ஏற்பட்டாலும் எனது கொள்கைகளை விட்டுத்தர முடியாது’’ என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, லக்னோவில் கூடிய ஷியா மற்றும் சன்னி முஸ்லிம் பிரிவினர், ரிஜ்வீ இறந்தால் அவரை புதைக்க நாட்டின் எந்த மூலையிலும் இடமளிக்க கூடாது என முடிவு செய்துள்ளனர். இந்த அரிதான முடிவு இதற்கு முன், மும்பையில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் தீவிரவாதியான அஜ்மல் கசாப்புக்கு எடுக்கப்பட்டது. இதுபோன்ற நிலையை தவிர்க்க ரிஜ்வீ லக்னோவில் டாக்கட்டோரா கர்பலாவில் ஒரு சமாதிக்கான இடத்தை வாங்கி வைத்திருந்தார். ரிஜ்வீ மீதானக் கோபத்தில் சில முஸ்லிம் இளைஞர்கள் சமாதியின் கட்டிடத்தை இடித்து விட்டனர்.

இதற்கு ரிஜ்வீ மீதான நில ஆக்கிரமிப்பு வழக்கை விசாரித்து வரும் சிபிஐ காரணம் எனக் கருதப்பட்டது. உ.பி.யில் ஆளும்பாஜக அரசை கவர ரிஜ்வீ முஸ்லிம்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதாகவும் கூறப்பட்டது. அனால், பாஜக.வும் ரிஜ்வீயை கண்டித்து கருத்து கூறி தனது எதிர்ப்பை காட்டியுள்ளது.

இதுகுறித்து பாஜக தேசிய செய்தித் தொடர்பாளரும் பிஹார் மாநில எம்எல்சி.யுமான ஷானாவஸ் உசைன் கூறும்போது, ‘‘குர்ஆன் உள்ளிட்ட எந்த மதங்களின் புனித நூல்களை அவமதித்தாலும் பாஜக எதிர்க்கும். 26 வசனங்களை குர்ஆனில் நீக்கக் கோரும் ரிஜ்வீயைபாஜக கடுமையாகக் கண்டிக்கிறது.குர்ஆன் உள்ளிட்ட அனைத்து மதநூல்களில் எந்த மாற்றங்களையும் பாஜக ஆதரிக்காது’’ என்றனர்.

இந்நிலையில், தன்னிடம் வந்த புகாரை ஏற்ற தேசிய சிறுபான்மை ஆணையம், 21 நாட்களில் பதில் அளிக்க ரிஜ்வீக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சமீபத்தில் நேபால் சென்றிருந்த ரிஜ்வீ, அங்கு சீனா மற்றும் பாகிஸ்தானியர்கள் சந்தித்ததாகவும், அதன் மீது தேசிய புலனாய்வு நிறுவனம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஷியா பிரிவின் தலைவர் கல்பே ஜாவேத் வலியுறுத்தி உள்ளார்.

SCROLL FOR NEXT