இந்தியா

மத்திய அமைச்சராக இருந்தபோது ரூ.6.1 கோடி சொத்து குவித்த வழக்கு: இமாச்சல முதல்வருக்கு அமலாக்கத் துறை சம்மன்

செய்திப்பிரிவு

சொத்து குவிப்பு வழக்கில் நேரில் ஆஜராகும்படி இமாச்சல பிரதேச முதல்வர் வீரபத்ர சிங்குக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. அத்துடன் வழக்கு விசாரணை குறித்து அவரிடம் வாக்குமூலம் பெறவும் அமலாக்கத் துறை தயாராகி வருகிறது.

மத்திய உருக்கு துறை அமைச்சராக வீரபத்ர சிங் பதவி வகித்த காலத்தில் ரூ.6.1 கோடி அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள் அவர் மீதான குற்றச்சாட்டை உறுதி செய்தனர்.

ஆயுள் காப்பீட்டில் முதலீடு

கடந்த 2009-ம் ஆண்டு ரூ.6.1 கோடியை எல்ஐசி முகவர் சவுஹான் உதவியுடன் ஆயுள் காப்பீட்டில் அவர் முதலீடு செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. வேளாண் தொழில் மூலம் இந்த பணம் கிடைத்ததாக வீரபத்ர சிங் முதல்கட்ட விசாரணையில் தெரிவித்திருந்தார். எனினும் வருமான வரித் தாக்கலில் அந்த பணம் தொடர்பான விவரங்கள் ஏதும் கண்டறியப்படவில்லை. இதையடுத்து வீரபத்ர சிங், அவரது மனைவி பிரதீபா சிங், எல்ஐசி முகவர் ஆனந்த் சவுஹான், அவரது சகோதரர் சி.எல்.சவுஹான் ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

ஆவணங்கள் பறிமுதல்

இதன் அடிப்படையில் வீரபத்ர சிங் ஆகியோர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு பதிவு செய்த அமலாக்கத் துறையும் கடந்த வாரம் டெல்லி, மகாராஷ்டிரா மற்றும் மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டு முக்கிய ஆவணங்களை கைப்பற்றியது. இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகுமாறு இமாச்சல பிரதேச முதல்வர் வீரபத்ர சிங்குக்கு நேற்று அமலாக்கத் துறை சார்பில் சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து அமலாக்கத் துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘‘வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் அவரிடம் நேரில் விசாரணை நடத்துவதற்காக சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது. டிசம்பர் முதல் வாரத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை நேரில் ஆஜராக முடியாவிட்டால், அவர் சார்பில் சட்ட பிரதிநிதிகளோ அல்லது அவர் அங்கீகரித்த நபரோ நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கலாம். மேலும், விசாரணைக்கு தேவையான ஆவணங்களையும் சமர்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. முதல்வர் வீரபத்ர சிங் நேரில் ஆஜராகும்பட்சத்தில் அவரது வாக்குமூலத்தை பதிவு செய்யவும் தயாராகி வருகிறோம்’’ என கூறப்பட்டுள்ளது.

இதே போல் இவ்வழக்கில் தொடர்புடைய மற்றவர்களுக்கும் அமலாக்கத் துறை சார்பில் நேற்று சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது.

SCROLL FOR NEXT