இந்தியா

எழுத்தறிவு புரட்சி: பெற்றோருக்கு கல்வி புகட்டும் பிள்ளைகள்!

எஸ்.புவனேஸ்வரி

கர்நாடக மாநிலம் துமகூரு நகரத்துக்குச் சென்றிருக்கிறீர்களா? அப்படியே மறக்காமல் அருகில் இருக்கும் இஸ்மாயில் நகருக்கும் சென்று வாருங்கள். அங்கே மாலை 8 மணிக்குப் பிறகு ஓர் ஆச்சரியமான காட்சியைத் தினமும் பார்க்க முடியும்.

அங்கு வசிக்கும் குழந்தைகள், தங்களின் பெற்றோர்களுக்கும், பெரியவர்களுக்கும் எழுதவும் படிக்கவும் கற்றுக் கொடுக்கின்றனர். இதன் மூலம் துமகூரு நகரின் பல பகுதிகளில் வசிக்கும், பிற்படுத்தப்பட்ட ஹேண்டி ஜோகி சமுதாயத்தைச் சேர்ந்த மக்களிடம் சத்தமே இல்லாமல், ஒரு கல்விப் புரட்சியை ஏற்படுத்தி வருகின்றனர் அக்குழந்தைகள்.

நாடோடி இனத்தைச் சேர்ந்தவர்களான ஜோகி இன மக்கள், இதற்கு முன்னால் பிச்சையெடுத்தும், பன்றி வளர்த்தும் வாழ்ந்து வந்தனர். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பியபோது, அவர்களுக்கு மதப்பெரியோர்கள் அபராதம் விதித்த நிலையும் இருந்தது. இந்நிலையில் இந்தத் தலைமுறைக் குழந்தைகள் வெற்றிகரமாக பள்ளிக்குள் அடியெடுத்து வைத்துள்ளனர்.

இஸ்மாயில் நகரின் சேரிப்பகுதியில் ஹேண்டி ஜோகி மற்றும் லம்பாணி சமுதாயத்தைச் சேர்ந்த 50 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கிருந்து 4 முதல் 17 வயது வரையிலான சுமார் 150 குழந்தைகள் பள்ளிக்குச் சென்று வருகின்றனர். 10 வருடங்களுக்கு முன் இதே வகுப்பைச் சேர்ந்த இராமக்கா என்னும் படிக்காத மாற்றுத் திறனாளிப் பெண், பள்ளி செல்வதில் இருந்த மூடநம்பிக்கைகளை முழுமையாகக் களைய முயற்சி மேற்கொண்டார். 2005-ம் ஆண்டு தொடங்கிய அந்நிகழ்வு, இன்றைய மாற்றத்துக்கு அடிகோலி இருக்கிறது.

உயிர்ப்பான மாலை வேளை

இதைத் தொடர்ந்து, பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்த பிள்ளைகள், தனது பெற்றோர்களுக்கும், குடிசைவாசிகளுக்கும் 'குழந்தை ஆசிரியர்கள்' ஆகியிருக்கிறார்கள். கடந்த ஆறு மாதங்களில், அவர்கள் சுமார் 45 பெரியவர்களுக்கு வகுப்பு எடுத்திருக்கிறார்கள். பெரியவர்கள், வீட்டு வேலைகளை முடித்துவிட்டு மாலை வருகின்றனர். சேரியின் தெரு விளக்கில் சுமார் 8.30 மணிக்கு அவர்களின் இரவுப்பள்ளி தொடங்குகிறது.

சரோஜம்மா (48), வெங்கடம்மா (60), தொட்டகொறையா (65), பாப்பக்கா (35), கங்கம்மா (40) ஆகியோர்கள், இதன்மூலம் கையெழுத்துப் போடக் கற்றுக் கொண்டிருக்கின்றனர்.

அரசுப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மகாலட்சுமி சொல்கிறார், "என்னுடைய பெற்றோரும், தாத்தா, பாட்டியும் கையெழுத்துப் போட வேண்டியிருக்கும் போது, கைவிரல் ரேகையை வைப்பார்கள். அதைப் பார்க்கும்போது எனக்குக் கஷ்டமாக இருக்கும். அதனால் அவர்களுக்கு எழுதக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்திருக்கிறேன். அதேபோல் எங்கள் சேரியில் இருக்கும் அனைவருக்கும் எழுதவும், படிக்கவும் கற்றுக்கொடுக்க ஆசை".

SCROLL FOR NEXT