மார்ச் 1-ம் தேதியில் இருந்து மார்ச் 15-ம் தேதி வரை 15 நாட்களில் 16 மாநிலங்களில் 70 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு 150 சதவீதம் உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவில் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மார்ச் இறுதியில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல் செய்யப்பட்டது.
எனினும் மக்களின் வாழ்வாதாரம், நாட்டின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு கடந்த ஜூன் முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்டது. இதன்பின் கடந்த செப்டம்பரில் வைரஸ் பரவல் உச்சத்தை தொட்டது. அப்போது நாளொன்றுக்கு 90,000 முதல் ஒரு லட்சம் பேருக்கு தொற்று ஏற்பட்டது.
அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் வைரஸ் பரவல் படிப்படியாக குறைந்து வந்தது. ஆனால் கடந்த பிப்ரவரி முதல் மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, குஜராத், தமிழகம் ஆகிய மாநிலங்களில் கோவிட் தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 28,903 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 71.10 சதவீதம் பேர், மேற்கண்ட 5 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
மகாராஷ்டிராவில் மட்டும் 17,864 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. கேரளாவில் 1,970 பேருக்கும், பஞ்சாப்பில் 1,463 பேருக்கும் புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.
மார்ச் 1-ம் தேதியில் இருந்து மார்ச் 15-ம் தேதி வரை 15 நாட்களில் 16 மாநிலங்களில் 70 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு 150 சதவீதம் உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடுமுழுவதும் தற்போதுள்ள கரோனா நோயாளிகளில் 61.8 சதவீதம் பேர் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
COVID-19