கேரள முதல்வர் பினராயி விஜயன், முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி : படம் உதவி ட்விட்டர் 
இந்தியா

காங்கிரஸ் மூத்த தலைவர்கள் உம்மன் சாண்டி, சென்னிதலாவைவிட கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு சொத்து குறைவு

பிடிஐ

காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான உம்மன் சாண்டி, எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலாவைவிட, கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு சொத்து மதிப்பு குறைவு என வேட்புமனுத் தாக்கலின்போது அளிக்கப்பட்ட பிரமாணப்பித்திரம் மூலம் தெரியவந்துள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள 140 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் முதல்வர் பினராயி விஜயன் தர்மாடம் தொகுதியிலும், எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா ஹரிபாடு தொகுதியிலும், முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி புதுப்பள்ளி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். இதற்கான வேட்புமனுக்களையும் மூன்று தலைவர்களும் தாக்கல் செய்துள்ளனர்.

பினராயி விஜயன்

இதில் கண்ணூர் மாவட்டம் தர்மாடம் தொகுதியில் போட்டியிடும் பினராயி விஜயனுக்கு ரூ.51.95 லட்சம் மதிப்பில் அசையா சொத்துக்கள் உள்ளன. இதில் இரு மனைகளுடன் கூடிய ஒரு வீடு அடக்கம். தலச்சேரியில் உள்ள எஸ்பிஐ வங்கியில் ரூ.78,048 பணம், மலையாளம் கம்யூனிகேஷன்லிமிட் நிறுவனத்தில் ரூ.10 ஆயிரம் மதிப்பில் பங்குகள், கேஐஏஎல் நிறுவனத்தில் ரூ.ஒரு லட்சம் மதிப்பில் பங்குகள் உள்ளிட்ட ரூ.2.04 லட்சம் அசையும் சொத்துக்கள் உள்ளன. ஆண்டு வருமானமாக 2020-21ம் ஆண்டில் ரூ.2,87,860 ஆக இருக்கிறது என பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

பினராயி விஜயனின் மனைவி கமலாவுக்கு ரூ.5,47,803 வங்கியிலும், ரூ.35 லட்சம் சொத்துக்களும் உள்ளன. பினராயி விஜயன் தன்மீது இரு வழக்குகள் நிலுவையில் உள்ன. ஒன்று சிபிஐ நீதிமன்றத்திலும், மற்றொன்று உச்ச நீதிமன்றத்திலும் உள்ளன எனத் தெரிவித்துள்ளார்.

காங். தலைவர்கள் உம்மன் சாண்டி, ரமேஷ் சென்னிதலா

எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா ஆழப்புழா மாவட்டம் ஹரிபாடு தொகுதியில் போட்டியிடுகிறார். சென்னிதலாவுக்கு ரூ.1.23 கோடிக்கு சொத்துக்கள் உள்ளன, இதில் ரூ.76,20,620 க்கு அசையா சொத்துக்களும் அடக்கம்.

சென்னிதலாவுக்கு ஒரு கார், எல்ஐசி பாலிசி, முதலீடுகள், பங்குகள், பத்திரங்கள் என ரூ.47,26,091 மதிப்பில் அசையும் சொத்துக்கள் உள்ளன.

சென்னிதலா மனைவி அனிதா ரமேஷுக்கு அசையும் சொத்துக்கள் மதிப்பு ரூ.1,61,07,033 உள்ளிட்ட ரூ.2,20,77,033 மதிப்புக்குச் சொத்துக்கள் உள்ளன.

உம்மன் சாண்டி

கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி கோட்டயம் மாவட்டம் புதுப்பள்ளி தொகுதியில் போட்டியிடுகிறார். உம்மன் சாண்டிக்கு ரூ.2.99 லட்சம் மதிப்பில் அசையும் சொத்துக்கள் உள்ளிட்ட ரூ.3.41 கோடிக்கு சொத்துக்கள் உள்ளன.

உம்மன் சாண்டி தன்மீது நிலுவையில் 4 வழக்குகள் இருக்கின்றன என்றும், ரூ.25.26,682க்கு கடன் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT