உச்ச நீதிமன்றம் : கோப்புப்படம் 
இந்தியா

ஆதார் கார்டுடன் இணைக்காததால் 3 கோடி ரேஷன் கார்டுகள் ரத்து: மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

பிடிஐ

ஆதார் கார்டுடன் இணைக்கவில்லை என்பதற்காக 3 கோடி ரேஷன் அட்டைகளை ரத்து செய்துவிட்டோம் எனக் கூறுவது தீவிரமானது எனக் கூறிய உச்ச நீதிமன்றம், மத்திய அரசும், மாநில அரசுகளும் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.

2018-ம் ஆண்டு, செப்டம்பர் 28-ம் தேதி ஜார்க்கண்ட் மாநிலத்தில் சிம்டேகா மாவட்டத்தில் தேவி என்பவரின் 11 வயது மகள் சந்தோஷி பட்டினியில் உயிரிழந்தார். சந்தோஷியின் குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள தலித் குடும்பம். ஆதார் அட்டையுடன் ரேஷன் அட்டையை இணைக்கவில்லை என்பதற்காக சந்தோஷியின் குடும்ப ரேஷன் அட்டையை அதிகாரிகள் ரத்து செய்துவிட்டனர்.

இதனால் 2017-ம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து சந்தோஷி குடும்பத்தாருக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்கவில்லை. இதனால், ஒரு கட்டத்தில் கொடுமையான பட்டினியால் 11 வயது சந்தோஷி உயிரிழந்தார். அவரின் தாய் தேநீர், உப்புநீர் ஆகியவற்றைக் குடித்து மட்டும் உயிர் வாழ்ந்தார்.

இந்தச் சம்பவம் வெளி உலகிற்குத் தெரிந்தபின் சந்தோஷியின் சகோதரி தேவி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடந்து வந்த நிலையில் 2019-ம் ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ஆதார் அட்டையை ரேஷன் அட்டையுடன் இணைக்காமல், ரேஷன் பொருட்கள் மறுக்கப்பட்டு பட்டினியால் உயிரிழந்தவர்கள் குறித்து பதில் அளிக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவிட்டிருந்தது.

இந்த விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல் செய்த மத்திய அரசு, பட்டினியால் நாட்டில் யாரும் உயிரிழக்கவில்லை. ஆதார் கார்டு இல்லை என்ற காரணத்தால் யாருக்கும் உணவுப் பொருட்கள் வழங்குவது மறுக்கப்படவில்லை என்று தெரிவித்தது.

இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, ஏஎஸ்.போபன்னா, வி. ராமசுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் இன்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் கோய்லி தேவி சார்பில் மூத்த வழக்கறிஞர் கோலின் கோன்சால்வேஸ் ஆஜரானார். மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், அமான் லெகி ஆஜரானார்.

அப்போது, மனுதாரர் வழக்கறிஞர் கோலின் கோல்சால்வேஸ் கூறுகையில், "நாங்கள் மிகப்பெரிய விஷயத்தைப் பற்றி வாதிடுகிறோம். ஆதார் கார்டுடன் ரேஷன் அட்டைகளை இணைக்கவில்லை என்பதற்காக மத்திய அரசு 3 கோடி ரேஷன் அட்டைகளை ரத்து செய்துள்ளது" எனத் தெரிவித்தார்.

அதற்கு சொலிசிட்டர் ஜெனரல் லெகி, "மனுதாரரின் வழக்கறிஞர் கூறுவது பொய். அவ்வாறு 3 கோடி ரேஷன் கார்டுகளை மத்திய அரசு ரத்து செய்யவில்லை. இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

அப்போது குறிக்கிட்ட கோலின் கோன்சலாஸ், "பிரதான வழக்கில்தான் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், 3 கோடி ரேஷன் கார்டுகளை ரத்து செய்த விவகாரத்தில் அல்ல. இது பட்டினியோடு தொடர்புடைய விவகாரம்" என்றார்.

இதைக் கேட்ட நீதிபதிகள் அமர்வு, "இந்த வழக்கை இரு தரப்பினருக்கும் இடையிலான வழக்காக நடத்தக் கூடாது. இது மிகவும் தீவிரமானது. இந்த விவகாரத்தை இறுதி விசாரணைக்குக் கொண்டு வருகிறோம்" எனத் தெரிவித்தார்.

அப்போது தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே கூறுகையில், "மும்பை உயர் நீதிமன்றத்தில் நான் நீதிபதியாக இருந்தபோது இதேபோன்ற வழக்கை நான் சந்தித்திருக்கிறேன். வழக்கின் விசாலமான நோக்கத்தைக் கருத்தில் கொண்டு பல்வேறு வகைகளில் நிவாரணம் வழங்கிட வேண்டும் என மனுதாரர் கோருகிறார். இந்த வழக்கை வேறு ஒரு நாளில் விசாரிக்கிறோம். இந்த வழக்கில் ஆதார் தொடர்பு இருப்பதால், மத்திய அரசு இதில் பதில் அளிக்க வேண்டும். மாநில அரசுகளும் அடுத்த 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும்" என உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT