வியாபம் ஊழல் வழக்கில் தொடர் புடைய மத்தியப் பிரதேச ஆளுநர் ராம் நரேஷ் யாதவை பதவி நீக்கம் செய்யுமாறு தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வியாபம் என்றழைக்கப்படும் மத்தியப் பிரதேச மாநில தொழில் முறை கல்வித் தேர்வு வாரியம் சார்பில் ஆசிரியர்கள், மருத்துவ அதிகாரிகள், போலீ ஸார் மற்றும் வன அதிகாரிகள் பணிக்கான தேர்வு நடத்தப் படுகிறது.
இந்த தேர்வு தொடர்பாக பல கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக வும், இதில் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், ஆளுங்கட்சி பிரமுகர்கள் என அனைவருக்கும் தொடர்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கை சிபிஐ தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், வியாபம் ஊழல் வழக்கில் தொடர்புடைய மாநில ஆளுநர் ராம் நரேஷ் யாதவை பதவியில் இருந்து நீக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மேலும் ஊழலில் தொடர் புடைய ஆளுநர்களை பதவி நீக்கம் செய்வதற்கான வழிமுறை களை வகுக்குமாறு உள்துறை அமைச்சகத்துக்கும் உத்தரவிட வேண்டும் என குறிப்பிடப் பட்டிருந்தது.
சமூக ஆர்வலர் சஞ்ஜய் சுக்லா சார்பில் இந்த மனுவை மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் தாக்கல் செய்வதற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து மற்றும் நீதிபதிகள் சிவ கீர்த்தி சிங், அமிதவா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு அனுமதி அளித்திருந்தது. நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது மனு தொடர்பாக பதில் அளிக்குமாறு கேட்டு மத்திய அரசுக்கும், மத்தியப் பிரதேச ஆளுநர் ராம் நரேஷ் யாதவுக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
முன்னதாக ஆளுநரை பதவி நீக்கக் கோரி வழக்கறிஞர்கள் குழு தாக்கல் செய்த மனுவையும் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ள உச்ச நீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.