இந்தியா

பகவான் ராமர், கிருஷ்ணரின் அவதாரமா பிரதமர் நரேந்திர மோடி?- உத்தராகண்ட் முதல்வரின் கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்

செய்திப்பிரிவு

உத்தராகண்ட் முதல்வர் தீரத் சிங் ராவத்தின் கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

உத்தராகண்டில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. உட்கட்சி பூசல் காரணமாக அந்த மாநில முதல்வராக பதவி வகித்த திரிவேந்திர சிங் அண்மையில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து புதிய முதல்வராக தீரத் சிங் ராவத் கடந்த 10-ம் தேதி பதவியேற்றார்.

ஹரித்துவாரில் நேற்று முன்தினம் நடைபெற்ற விழாவில் முதல்வர் தீரத் சிங் ராவத் பேசும்போது, "பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்காக பணியாற்றி வருகிறார். அவரோடு இணைந்து புகைப்படம் எடுத்து கொள்ள உலக தலைவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். அவர் நினைத்தால் எதையும் சாதிப்பார். பகவான் ராமர், கிருஷ்ணரின் அவதாரமாக பிரதமர் நரேந்திர மோடியை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். அந்த காலம் வெகு தொலைவில் இல்லை" என்று தெரிவித்தார்.

மோடிக்கு கோயிலா?

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் உத்தராகண்ட் முன்னாள் முதல்வருமான ஹரிஷ் ராவத் கூறும்போது, "கட்சியின் தலைவருக்கு புகழாரம் சூட்டுவது தவறில்லை. ஆனால் ஒரு மனிதரை கடவுளுக்கு நிகராக ஒப்பிடுவது, சித்தரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதை புதிய முதல்வர் புரிந்து கொள்வார் என நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

சமாஜ்வாதி செய்தித் தொடர்பாளர் சுனில் யாதவ் கூறும்போது, "குஜராத் மைதானத்துக்கு ஏற்கெனவே மோடியின் பெயர் சூட்டப்பட்டுவிட்டது. அடுத்து பிரதமர் நரேந்திர மோடியின் பெயரால் அயோத்தியில் புதியகோயில் கட்ட பாஜக திட்டமிட்டுள்ளதா" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து உத்தராகண்ட் மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் மன்வீர் சவுகான் கூறும்போது, "பகவான் ராமர் அப்பழுக்கற்றவர். மிகச் சிறந்த முன்மாதிரி. பிரதமர் நரேந்திர மோடியும் அதே பாதையில் செல்கிறார். அதையே முதல்வர் தீரத் சிங் ராவத் கூறியிருக்கிறார்" என்று விளக்கம் அளித்துள்ளார்.

SCROLL FOR NEXT