மகாத்மா காந்தியை பின்பற்றாமல் ஜின்னாவின் அடிச்சுவட்டை காங்கிரஸ் கட்சி பின்பற்றுகிறது. இது நாட்டை அழிக்கும் என்று ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் குற்றம் சாட்டினார்.
சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளும் அசாம் மாநிலத்தின் திப்ரூகர் மாவட்டத்தில் பாஜக சார்பில் நடந்த கூட்டத்தில் ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பேசினார்.
அப்போது, மே.வங்கத்தில் ஐஎஸ்எப் கட்சியுடனும் கேரளத்தில் முஸ்லிம் லீக் கட்சியுடனும் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளது குறித்து சவுகான் குறிப்பிடும்போது, “மகாத்மா காந்தியின் அடிச்சுவட்டை காங்கிரஸ் பின்பற்றவில்லை. ஜின்னாவின் அடிச்சுவட்டை காங்கிரஸ் கட்சியும் ராகுல் காந்தியும் பின்பற்றுகின்றனர். ஜின்னாவின் அடிச்சுவடு அசாம் மற்றும் இந்தியாவை அழிக்கும்” என்றார்.
சவுகான் மேலும் பேசும்போது, “அசாமை 55 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் ஆட்சி செய்துள்ளது. ஆனால் மாநிலத்துக்கு என்ன கொடுத்தது? ஊடுருவல், வன்முறை, தீவிரவாதம், போராட்டம், பட்டினி, வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றை மட்டுமே இந்திரா காந்தியும் ராஜீவ் காந்தியும் கொடுத்தனர்.
ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி தலைமையின் கீழ் காங்கிரஸ் வந்துள்ளது. எதிர்காலத்தில் வரலாற்றுப் பாடத்தில் மட்டுமே காங்கிரஸ் இருக்கும்” என்றார்.