இந்தியா

கேரள தேர்தலில் இடதுசாரி அணிக்கு ஆதரவு: தேசியவாத காங்கிரஸில் இணைந்த பி.சி.சாக்கோ அறிவிப்பு

செய்திப்பிரிவு

காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய மூத்த தலைவர் பி.சி.சாக்கோ சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். சட்டப்பேரவைத் தேர்தலில் இடதுசாரி கூட்டணிக்கு ஆதரவு அளிக்கப்போவதாக அவர் அறிவித்துள்ளார்.

கேரளாவில், 140 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 2-ல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு சில வாரங்களே உள்ள நிலையில், கட்சிக்குள் ஜனநாயகம் இல்லை என்றும், நேர்மையான காங்கிரஸ்காரனாக இருப்பது கடினம் எனவும் கூறி, அக்கட்சியின் மூத்த தலைவரும் திருச்சூர் முன்னாள் எம்.பி.யுமான பி.சி.சாக்கோ கட்சியில் இருந்து விலகினார்.

இதையடுத்து அவர் பாஜகவில் இணையக்கூடும் எனத் தகவல்கள் வெளியாகின. ஆனால் அதனை அவர் திட்டவட்டமாக மறுத்தார். இந்தநிலையில் பி.சி.சாக்கோ சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்தார்.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை நேரில் சந்தித்து அக்கட்சியில் இணைந்தார். பின்னர் அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியையும் சந்தித்து பேசினார்.

பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் ‘‘கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் இடதுசாரி கூட்டணிக்கு எனது ஆதரவை தெரிவித்துள்ளேன். அந்த கூட்டணியை ஆதரித்து பிரச்சாரம் செய்யவுள்ளேன்’’ எனக் கூறினார்.

SCROLL FOR NEXT