உச்ச நீதிமன்றத்தில் குர்ஆனின் 26 வசனங்களை நீக்கக் கோரி ஷியா பிரிவு தலைவர் வசீம் ரிஜ்வீ மனு அளித்திருந்தார். இதற்காக அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உத்தரப்பிரதேச முஸ்லிம்கள் ரிஜ்வீ மீது தம் மாநிலக் காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளனர்.
தனது மனுவில் ரிஜ்வீ, புனித நூலான குர்ஆனில் இந்த வசனங்களால் தீவிரவாதம் வளர்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். இம் மனுவை உச்ச நீதிமன்றத்தில் அளித்தமைக்காக ரிஜ்வீக்கு எதிராக பல மாநிலங்களில் முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
உ.பி.யில், ரிஜ்வீயை எதிர்த்து முஸ்லிம்களின் ஷியா மற்றும் சன்னி இரண்டு பிரிவினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, உ.பி.யின் பரேலி நகரக் காவல் நிலையத்தில் நிஜ்வீ மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பரேலியின் இத்தஹாத்-எ-மில்லத் கவுன்சில் சார்பிலான இப்புகாரில், ’குர்ஆன் மீது வழக்கு தொடுத்து மதநல்லிணக்கத்தை குலைக்கு வசீம் ரிஜ்வீ முயல்கிறார். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் அனைத்து மதத்தினருக்கும் அதன் வழி நடக்க முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது.
இதன் மீது கேள்வி எழுப்பியதன் மூலம் ரிஜ்வீ, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கும் எதிராக செயல்பட்டுள்ளார். எனவே, அவர் மீது ஐபிசி 295 ஏ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோன்ற புகார் ஆக்ராவின் பல்வேறு காவல் நிலையங்களிலும் முஸ்லிம் அமைப்புகளால் அளிக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற புகார்கள் உ.பி.யின் மற்ற மாவட்டங்களிலும் தொடர்கின்றன.
ரிஜ்வீ தலைக்கு ரூ.11 லட்சம் பரிசு
இதனிடையே, வசீம் ரிஜ்வீயின் தலையை துண்டித்து கொண்டு வருபவருக்கு ரூ.11 லட்சம் பரிசாக அளிக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. உ.பி.யின் முராதாபாத்தில் இந்த அறிவிப்பை அளித்தவர் மீது அந்நகரக் காவல் நிலையத்தார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ரிஜ்வீ அளித்த மனுவின் பின்னணி
கடந்த சில ஆண்டுகளாக சன்னி பிரிவு முஸ்லிம்களுக்கு எதிராகவும், பாஜக மற்றும் இந்துத்துவாவிற்கு ஆதரவாகவும் வசீம் ரிஜ்வீ பேசி வருகிறார். இதன் பின்னணியில், உ.பி.யின் ஷியா மத்திய வஃக்பு வாரியத்தின் தலைவராக இருந்த ரிஜ்வீ மீது நில ஆக்கிரமிப்பு வழக்குகள் பதிவானது காரணம் எனக் கருதப்படுகிறது.
தற்போது, சன்னி முஸ்லிம்கள் மீதான எதிர்ப்பின் உச்சமாக ரிஜ்வீ, குர்ஆன் மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இதற்கு ரிஜ்வீ மீதான வழக்குகளை, பாஜக ஆளும் உ.பி.யின் முதல்வர் யோகி ஆதித்யநாத் சிபிஐக்கு வசம் ஒப்படைத்திருப்பது காரணமாகவும் கூறப்படுகிறது.