இந்தியா

27 வருடங்களுக்குப் பின் சோட்டா ராஜனுடன் சகோதரிகள் சந்திப்பு

ஆர்.ஷபிமுன்னா

சிபிஐ விசாரணை கைதியாக இருக்கும் சோட்டா ராஜனை அவரது சகோதரிகள் சந்தித்தனர். இந்த சந்திப்பு 27 வருடங்களுக்கு பின் டெல்லியில் நடைபெற்றுள்ளது.

தீபாவளியை தொடர்ந்து நேற்று (வெள்ளிக்கிழமை) வட இந்தியா முழுவதும் ‘பாய் தோஜ்’ பண்டிக்கை (சகோதரன் நலனுக்காக சகோதரிகள் பூஜை) கொண்டாடப்பட்டது.

இந்த நாளில் தன் சகோதரனை சந்திக்க அனுமதிக்குமாறு சோட்டா ராஜனின் சகோதரிகள் டெல்லி நீதிமன்ற நீதிபதியிடம் கோரினர்.

அவர்களது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதை தொடர்ந்து இளைய சகோதரியான சுனிதா சாக்காராம் சவான் மற்றும் மூத்த சகோதரியான மாலினி சக்பால் ஆகியோர் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை சுமார் 5.00 மணிக்கு ராஜனை சந்தித்தனர்.

சுமார் பத்து நிமிடங்களுக்கு மட்டும் நடந்த இந்த சந்திப்பு மிகவும் உணர்ச்சிகரமாக இருந்துள்ளது. இதில், ராஜனை அரவணைத்த அவரது சகோதரிகள், கண்ணீர் மல்க நலம் விசாரித்தனர். கடசியாக ராஜன் 27 வருடங்களுக்கு முன் இந்தியாவை விட்டு கிளம்பும் போது அவர் தன் சகோதரிகளை மும்பையில் சந்தித்து விட்டச் சென்றதாகக் கூறப்படுகிறது.

அதன் பிறகு முதன் முறையாக சகோதரர்களை சந்திக்கும் பண்டிகையான பாய் தோஜை முன்னிட்டு அவர்களுக்கு ராஜனை சந்திக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்த அனுமதிக்கான மனுவை ராஜனின் சகோதரிகள் சார்பில் வழக்கறிஞர் ராஜீவ் ஜெய் மனு செய்திருந்தார். இதை விசாரித்த சிபிஐயின் சிறப்பு நீதிபதி வினோத் குமார், ரஅஜன்இன் தலைமை விசாரணை அதிகாரியிடம் அனுகுமாறு உத்தரவிட்டிருந்தார்.

இதில், மூத்த சகோதரியான மாலினியின் உடல்நிலை சரியில்லை என்பதால் அவருக்கு உதவியாக மருமகன் அணில் மேனனையும் உடன் இருக்க அனுமதிக்கும்படி கேட்கப்பட்டிருந்தது. ஆனால், மேனனுக்கு அனுமதி கிடைக்கவில்லை. மாறாக ஒரு பெண் கான்ஸ்டபிள் மாலினியின் உதவியாக சென்றிருந்தார்.

'சோட்டா' ராஜன் ஆனது எப்படி?

55 வயதான சோட்டா ராஜனின் இயற்பெயர் ராஜேந்திர சதாஷிவ் நிகல்ஜி. மும்பை திரையரங்குகளின் நுழைவுச்சீட்டுக்களை கள்ள மார்கெட்டில் விற்கும் தொழிலை துவங்கியவர் பிறகு மும்பை தாதாக்களில் ஒருவரும் தன் மூத்த சகோதரியின் கணவரான கேரளாவை சேர்ந்த ராஜன் நாயரின் வலது கரமாக செயல்பட்டு வந்தார்.

தம் எதிரிக் கும்பலால் ராஜன் நாயர் கொலை செய்யப்பட்டு விட ’சோட்டா ராஜன்’ ஆனார் சதாஷிவ் நிகல்ஜி. அப்போது மும்பையின் முக்கிய தாதாவாக வளர்ந்து விட்ட தாவூதுடன் இணைந்தவர் பிறகு, அவரது பரம விரோதியாகி விட்டார் ராஜன். இதனால், தாவூதின் ஆட்களால் ராஜனின் உயிருக்கு ஆபத்து நிலவுகிறது.

பாலியில் கைதாகி இந்தியா கொண்டு வரப்பட்ட சோட்டா ராஜன், கடந்த நவம்பர் 7 முதல் 10 நாட்களுக்காக சிபிஐயின் விசாரணை கைதியாக உள்ளார். இவர் மீது சிபிஐ சார்பில் போலி பாஸ்போர்ட் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவர் மீது மும்பையில் 20 கொலை வழக்குகள் உட்பட 80-க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் மும்பையின் பல்வேறு காவல் நிலையங்களில் பதிவாகி ராஜன் தேடப்பட்டு வந்தார்.

SCROLL FOR NEXT