ஆந்திர மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்று கடந்த மாதத்தை விட சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது.
திருமலையில் வேதகிரி எனும் பகுதியில் உள்ள வேதபாட சாலையில் தமிழகம், ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங் களை சேர்ந்த மாணவர்கள் வேதம் படித்து வருகின்றனர். சுமார் 420-க்கும் மேற்பட்ட மாணவர்கள் திருமலையிலேயே தங்கி வேதம் பயின்று வருவதால், அவர்களுக்கு தங்குமிடமும், உணவும் தேவஸ்தானம் வழங்கி வேதம் பயில்வித்து வருகிறது.
இந்நிலையில், இந்த மாணவர்களில் சிலருக்கு திடீரென சளி, காய்ச்சல், தலைவலி என வரத்தொடங்கியதால், இவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் முதலில் 57 மாணவர்களுக்கு தொற்று இருப்பது உறுதியானது. இவர்கள் அனைவரும் திருப்பதி பத்மாவதி தேவஸ்தான விடுதியில் தங்க வைக்கப்பட்டு சிறப்பு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று மீண்டும் அங்குள்ள மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்யப் பட்டது. இதில் 4 மாணவர்கள், 6 ஆசிரியர்களுக்கு தொற்று பரவி இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து இவர்கள் 10 பேரும், திருப்பதியில் உள்ள பத்மாவதி அரசு மருத்துவமனையில் தங்கி, இலவசமாக சிகிச்சை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தலைமை நிர்வாக அதிகாரி ஜவஹர் ரெட்டி தெரிவித்துள்ளார்.