மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 16% இடஒதுக் கீடு வழங்கும் சட்டம் கடந்த 2018-ல் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் அம்மாநிலத்தில் இடஒதுக்கீடு 68% ஆக அதிகரித்தது.
1992-ல் மத்திய அரசுக்கு எதிராக வழக்கறிஞர் இந்திரா சஹானி தொடர்ந்த வழக்கில் ஓபிசி-க்கான 27% இடஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இடஒதுக்கீடு 50% அளவை தாண்ட கூடாது என உத்தரவிட்டிருந்தது.
இதன் அடிப்படையில் மராத்தா இடஒதுக்கீட்டுக்கு எதி ராக உச்ச நீதின்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் 16% இடஒதுக்கீடு சட்டத்தை உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பரில் நிறுத்தி வைத்தது.
இவ்வழக்கை நீதிபதி அசோக் பூஷண் தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.
இவ்வழக்கில் 50% இடஒதுக்கீடு வரம்பை மறு ஆய்வு செய்ய வேண்டுமா என்பது தொடர்பான விசாரணையை நீதிபதிகள் நேற்று தொடங்கினர்.
இதில் மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் அர்விந்த் தத்தார் வாதிடும்போது, “1992-ம் ஆண்டு தீர்ப்பை மறு ஆய்வு செய்யத் தேவையில்லை. இத்தீர்ப்பு பல்வேறு பிரச்சினைகளை உள்ளடக்கியது. தற்போது 50% இடஒதுக்கீடு வரம்பு பற்றி மட்டுமே கேள்வி எழுந்துள்ளது. ஏற்கெனவே இத்தீர்ப்பை 9 நீதிபதிகள் அமர்வு வழங்கியுள்ளது. இதனை மறுஆய்வு செய்ய வேண்டுமானால் 11 நீதிபதிகளை கொண்ட அமர்வு அமைக்க வேண்டும். மேலும், 50 சதவீத இடஒதுக்கீடு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று” என்றார்.
தமிழகம் சார்பில் வழக்கறிஞர் சேகர் நாப்தே வாதிடும்போது, “தமிழகத்தில் 50 சதவீதத்திற்கு மேல் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கான தனி சூழ்நிலைகளை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் இடஒதுக்கீடு என்பது அரசின் கொள்கை தொடர் புடையது” என்றார்.
தமிழகம் மற்றும் கேரளத்தில் தற்போது சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதால் இவ்வழக்கை தள்ளி வைக்க வேண்டும் என் இரு மாநில வழக்கறிஞர்களும் கோரினர். ஆனால் நீதிபதிகள் இதனை ஏற்கவில்லை.
இதையடுத்து இதுதொடர்பாக மாநில அரசுகள் தங்கள் கருத்தை ஒரு வாரத்துக்குள் தெரிவிக்க உத்தரவிட்டு, வழக்கை நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.