கேரள மாநிலம் தர்மடம் தொகுதியில் போட்டியிட, மாநில முதல்வர் பினராயி விஜயன் நேற்று கன்னூர் தேர்தல் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். படம்: பிடிஐ 
இந்தியா

‘மக்கள் கைவிட மாட்டார்கள், மீண்டும் ஆட்சிக்கு வருவோம்’: வகுப்புவாத சக்திகளுக்கு கேரளாவில் ஒருபோதும் வரவேற்பு இருக்காது - முதல்வர் பினராயி விஜயன் பேட்டி

என்.சுவாமிநாதன்

உரப்பானு (உறுதியான) எல்.டி.எப் என்னும் கோஷத்தை முன்வைத்து கேரளாவில் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி யுள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. இந்தத் தேர்தலில் புதுமுகங்களுக்கு அதிக வாய்ப்பு கொடுத்துள்ள மார்க்சிஸ்ட், கடந்த ஐந்தாண்டுகளில் செயல்படுத்திய திட்டங்களினால் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என நம்புகிறது. பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸோ ஐந்தாண்டுக்கு ஒரு முறை ஆட்சிமாற்றம் என்னும் கேரளத்தின் கடந்தகால வரலாற்றை சுட்டிக்காட்டுகிறது.

மலையாள ஊடகங்களின் சர்வே முடிவுகளும் இடதுசாரிகளுக்கு சாதகமாக வர, உற்சாகமாக தேர்தல் பணியாற்றி வருகின்றனர் மார்க்சிஸ்ட் கட்சியினர். தேர்தல் நேர பரபரப்புக்கு மத்தியில் கேரள முதல்வர் பினராயி விஜயன் அளித்த பேட்டி:

மத்திய அரசு, கேரள இடதுசாரி அரசை பலவீனப்படுத்தும் நோக்கத் தோடு மோசமாக சித்தரிப்பதாக தொடர்ந்து கூறுகிறீர்களே?

கடந்த ஜூலை மாதத்தில் நாங்கள் உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகிக் கொண்டிருந்தோம். அப்போது இருந்தே எங்கள் மீதான தாக்குதலை மத்திய அரசு தொடங்கிவிட்டது. மத்திய அரசின் கீழ்வரும் சில விஷயங்களை கையில் எடுத்துக்கொண்டு இங்கிருக்கும் பாஜக தலைவர்கள், தங்கக் கடத்தல் விவகாரத்தில் கேரள அரசின் பெயருக்கு களங்கம் வரும் வகையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டை எழுப்பினர். விசாரணை அமைப்புகளும், சில ஊடகங்களும் அதற்கு உரம்போட்டு எங்களுக்கு எதிராக வளர்த்துவிட்டனர். இதையெல்லாம் பார்த்துவிட்டுத்தான் எங்களுக்கு எதிராக சதி நடப்பதாகச் சொன்னேன். முதல்வர் அலுவலகம் மீது குற்றச்சாட்டு சொன்ன முதல் நபரே இப்போது பின்வாங்கிவிட்டதை நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. நான் இப்போது அவரது பெயரை சொல்லவும் விரும்பவில்லை.

தங்கக் கடத்தல் வழக்கு விசாரணை சரியான திசையில் செல்வதாக நீங்களே பிரதமருக்கு கடிதம் எழுதினீர்கள்தானே?

ஆமாம்.நான் கடிதம் எழுதினேன். தங்கம் உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட பொருள்களைக் கடத்துவது நம் பொருளாதாரத்தை மிகவும் மோசமாக பாதிக்கும். அது கொடூரமான குற்றம் என்பதால்தான் விரிவான விசாரணை கோரி முதலில் பிரதமருக்கு கடிதம் எழுதினேன். தொடக்கத்தில் விசாரணையின் போக்கு சரியாகத்தான் சென்றது. அதை பாராட்டினேன். ஆனால் ஒருகட்டத்தில் விசாரணையின் போக்கு உண்மையான குற்றவாளிகளை மறைக்கும் நிலைக்கு சென்றுவிட்டது. விசாரணையின் பார்வை எங்கள் அரசின் கொள்கை மற்றும் திட்டங்களைக் குறிவைத்து திரும்பியது. அதனால் தான் விசாரணை சரியான பாதையில் செல்லவில்லை என அழுத்தமாகச் சொன்னேன்.

கேரளத்தில் காங்கிரஸை எதிர்த்துவிட்டு மேற்கு வங்கத்திலும், தமிழகத்திலும் கூட்டணியில் இருப்பது முரணாக இல்லையா?

காங்கிரஸும், பாஜகவும் ஒரே நாணயத்தின் இருபக்கங்கள் என விமர்சிப்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன. அதே நேரம் இந்து ராஜ்ஜியத்தை நிறுவும் நோக்கோடு இருக்கும் ஆர்எஸ்எஸ் போன்று எந்த பாசிச அமைப்பின் கட்டுப்பாட்டிலும் காங்கிரஸ் இல்லை. பாஜகவை உண்மையாகவே களத்தில் இருந்து எதிர்க்கும் இடதுசாரிகள் அதற்கு பிறமாநிலங்களில் காங்கிரஸை பயன்படுத்துவதில் தவறு எதுவும் இல்லை. அதீத எச்சரிக்கையுணர்வுடனே அதை செய்கிறோம்.

ஐந்து ஆண்டு ஆட்சியில் பெரிய சாதனையாக எதைச் சொல்வீர்கள்?

மூன்று பகுதிகளாக பிரித்துச் சொல்லலாம் என நினைக்கிறேன். அதில் குறிப்பிடத்தக்க முதலாவது அம்சம் கேரளத்தின் வளர்ச்சி. ஆட்சிக்கு வந்ததும் உள்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்க ரூ.50 ஆயிரம் கோடிக்கு திட்டங்களை வகுத்தோம். ஆனால் இப்போது ரூ.63,200 கோடிகளுக்கு திட்டங்களைக் கொடுத்திருக்கிறோம். இரண்டாவது அம்சம் மக்களின் நலன் சார்ந்தது. முதியோர், ஆதரவற்ற கைம்பெண்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியத் தொகையை 600 ரூபாயில் இருந்து 1,600 ரூபாயாக உயர்த்தியுள்ளோம்.

கரோனா பெருந்தொற்று காலத்தில்கூட கேரளத்தில் யாரும் பசித்த வயிறுடன் இல்லை. மூன்றாவது, கடந்த ஐந்தாண்டுகளில் ஒக்கி புயல், நிபா வைரஸ், இரண்டு பெருவெள்ளத்தையும் எதிர்கொண்டோம். ஆனால் அப்போதும் மக்களின் பக்கம் நின்று அவர்களின் பெருந்துயரைப் போக்கினோம். இதையெல்லாம் பெரிய சாதனையாக நான் மட்டும் சொல்லவில்லை. மக்களும் சேர்ந்தே சொல்கிறார்கள். மக்கள் மீண்டும் ஆட்சியை எங்களுக்குத் தருவார்கள். ஐந்தாண்டு சாதனைகள் அதற்குக் கைக்கொடுக்கும்.

நாட்டின் ஒரே இடதுசாரி அரசாங்கமாக கேரளம் இருக்கிறது. அதை வெளியேற்ற பெரும்முயற்சி நடப்பதாக கூறப்படுகிறதே?

நாங்கள் கேரளத்தில் காலத்துக்கு ஏற்ற வளர்ச்சியைக் காட்டியுள்ளோம். ஒவ்வொரு ஆண்டும் மக்களுக்கு நாங்கள் செய்த பணிகள் குறித்து வெளிப்படையாக அறிக்கை வெளியிட்டு வருகிறோம். மக்களே எங்களின் கண்காணிப்பாளர்கள். கூட்டுறவு மற்றும் பாதுகாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை ஊக்குவித்துள்ளோம். உணவு, கல்வி, உடல்நலம், ஓய்வூதியம், குடிநீர், மின்சார இணைப்பு போன்ற மக்களுக்கு தேவையான பல விஷயங்களைச் செய்துள்ளோம். அதனால் மக்கள் எங்களைக் கைவிட மாட்டார்கள். இந்தப் பணிகள் தொடரவேண்டும் என மக்களும் விரும்புகிறார்கள். ஆனால் ஜனநாயகத்துக்கும், அரசியல் சட்டதிட்டங்களுக்கும் சவால்விடும் வகையில் ஒரு கூட்டுமுயற்சி நடக்கத்தான் செய்கிறது. மத்திய அரசே அதற்கு முயற்சிக்கிறது.

கேரளாவில் காலூன்றத் துடிக்கும் பாஜகவின் கனவு பலிக்குமா? பூஜ்ஜியத்தில் இருந்தவர்கள் கடந்த தேர்தலில் கணக்கைத் தொடங்கிவிட்டார்களே?

கேரளம் மதச்சார்பின்மைக்கு பெயர் பெற்ற இடம். இந்த நிலமேமதச்சார்பின்மைக்கு உறுதி பூண்டுள்ளது. மனதின் அடி ஆழத்தில்இருந்து மனிதநேயத்தோடு சிந்திக்கும் மாநிலம் கேரளம். இங்கே மக்கள் மதப்பற்றின் அடிப்படையில் சிந்திப்பது இல்லை. மனிதத்தின் அடிப்படையிலேயே சிந்திக்கின்றனர். அதனால்தான் சொல்கிறேன், வகுப்புவாத சக்திகளுக்கு கேரளத்தில் ஒருபோதும் வரவேற்பு இருக்காது. கேரளத்தில் பாஜகவுக்கு எதிர்காலம் இருப்பதாக தோன்றவில்லை.

சபரிமலை பிரச்சினையை கொஞ்சம் எச்சரிக்கையுடன் கையாண்டி ருக்கலாம் என நினைக்கிறீர்களா? நம்பிக்கையின் பக்கம் நிற்கிறோம் என உங்கள் கட்சியே பின்னாளில் பிரச்சாரம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டதால் கேட்கிறேன்..

கரோனா காலத்திலும்கூட வருமானம் இல்லாத கோயில்களில் தடையின்றி பூஜைகள் நிகழ்ந்திட நாங்கள் ஒதுக்கிய நிதியைப் பாருங்கள். அப்போது நம்பிக்கையாளர்களின் பக்கம் இந்த அரசு நிற்பது தெளிவாகத் தெரியும். சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு வசதியாக ‘சபரிமலை மாஸ்டர் திட்டம்’ என்ற ஒன்றை செயல்படுத்தி வருகிறோம். அதற்கு ஆரம்பத்தில் ஒதுக்கப்பட்ட நிதியைவிட இப்போது கூடுதலாக ஒதுக்கியுள்ளோம். மாநில அரசானது, அரசியல் அமைப்பு சட்டத்துக்கு கட்டுப்பட்டது. அப்படியானால் அரசாங்கத்தைப் பொறுத்தவரை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு கட்டுப்பட்டுத்தான் ஆகவேண்டும். சபரிமலை விஷயத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத்தான் கேரள அரசு செய்தது. அதனால்தான் சொல்கிறேன், சபரிமலை ஐயப்பனின் பற்றாளர்களின் பக்கம் நாங்கள் இல்லை என யாரும் எங்கள் அரசை குறைசொல்ல முடியாது.

இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.

SCROLL FOR NEXT