மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் உடல்நிலை விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். அதே நேரத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரால் கொல்லப்பட்ட பாஜக குடும்பத்தினரின் வலியை மம்தா என்றாவது உணர்ந்திருக்கிறாரா என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளது. முதல் கட்டத் தேர்தல் வரும் 27-ம் தேதி நடக்கிறது. இதற்கான பிரச்சாரத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியும், எதிர்க்கட்சியான பாஜகவும் தீவிரமாக இறங்கியுள்ளன.
பன்குரா மாவட்டத்தில் உள்ள ராணி பந்த் நகரில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் கூறியதாவது:
''மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், நிச்சயமாக 7-வது ஊதியக் குழுவை அரசு ஊழியர்களின் நலனுக்காக அமல்படுத்துவோம் என்று உறுதியளிக்கிறேன்.
தீதி (மம்தா) உங்கள் காலில் காயம் ஏற்பட்டபோது, நீங்கள் வலியை உணர்கிறீர்கள். உங்களின் காயம் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். ஆனால், 130 பாஜக தொண்டர்களை உங்கள் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் குண்டர்கள் கொலை செய்தார்களே, அந்த 130 பாஜக தொண்டர்களின் தாய்மார்களின் உணர்வுகளை, வலியை, வேதனையை உணர்ந்திருக்கிறீர்களா. அந்த வலியை உணர ஏதாவது முயற்சி எடுத்திருக்கிறீர்களா?
பாஜக தொண்டர்களின் குடும்பத்தினர் அடைந்த வேதனையை ஒருபோதும் நீங்கள் உணர்ந்திருக்க மாட்டீர்கள். நிச்சயமாகத் தேர்தலில் உங்களுக்கு எதிராக வாக்களித்துச் சரியான பதிலடியை உங்களுக்கு வழங்குவார்கள்.
பாஜக ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தில் உள்ள பழங்குடிகளின் உரிமைகள் பாதுகாக்கப்படும். பழங்குடியினச் சான்றிதழ் வழங்குவதற்குக்கூட திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் கமிஷன் கேட்கிறார்கள். ஆனால், பழங்குடியினரின் உரிமைகள் நிலைநாட்டப்படும் என உறுதியளிக்கிறோம். அவர்களின் கல்வி, சுகாதாரம், குடிநீர் ஆகியவை மீது கவனம் செலுத்தப்படும். இதை நாங்கள் தேர்தல் அறிக்கையிலும் தெரிவித்துள்ளோம்".
இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.
முன்னதாக, ஜார்கிராம் நகரில் இன்று காலை அமித் ஷா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
''மேற்கு வங்கம் ஒரு காலத்தில் தேசத்தின் தலைமையாக இருந்தது. கல்வி, சுதந்திரப் போராட்ட வீரர்கள், மதத் தலைவர்கள் எனப் பலரும் இங்கிருந்துதான் உருவானார்கள். ஆனால், இதே மேற்கு வங்கம் இன்று குண்டர்கள் உருவாகும் மாநிலமாக மாறிவிட்டது.
மம்தாவின் ஆட்சியில் மாநிலம் 10 ஆண்டுகள் பின்தங்கிவிட்டது. ஊழல், அரசியல் வன்முறை, பிரிவினை, இந்துக்கள், பட்டியலினத்தவர்கள், பழங்குடி மக்கள் தங்கள் பண்டிகைகளைக் கொண்டாடக்கூட நீதிமன்றத்தில் அனுமதி பெற வேண்டிய நிலைதான் மாநிலத்தில் நீடிக்கிறது.
ஜார்கிரம் நகரில் பண்டிட் ரகுநாத் முர்மு பழங்குடியினப் பல்கலைக்கழகம் உருவாக்கப்படும், பழங்குடி மாணவர்களுக்கு பல்வேறு வாய்ப்புகளையும் உருவாக்குவோம். பழங்குடியின மாணவர்கள் 12-ம் வகுப்பில் 70 சதவீதம் மதிப்பெண் எடுத்தால், அவர்களுக்கான கல்வி உதவித்தொகை 50 சதவீதமாக உயர்த்தப்படும். ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தில் பழங்குடியின சமூகத்தை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கப்படும்''.
இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.