வயநாடு மாவட்டத்தில் உள்ள மனன்தாவடி தொகுதியின் பாஜக வேட்பாளர் மணிகண்டன், தேர்தலில் போட்டியிடுவதற்கு மறுத்துவிட்டார். நான் பாஜக ஆதரவாளரே அல்ல. என்னால் எவ்வாறு தேர்தலில் போட்டியிட முடியும் எனக் கூறி மறுப்பு தெரிவித்துள்ளார்.
கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் பாஜக 115 இடங்களில் போட்டியிடுகிறது. 115 இடங்களுக்கான வேட்பாளர்களையும் நேற்று பாஜக தலைமை அறிவித்தது.
இதில் வயநாடு மாவட்டத்தில் உள்ள மனன்தாவடி தொகுதி, பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட தனித் தொகுதியாகும். இந்தத் தொகுதியில் பாஜக சார்பில் மணிகண்டன் (மணிக்குட்டன்) போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. பனியா சமூகத்தைச் சேர்ந்த மணிகண்டன், அந்தச் சமூகத்தில் முதல் பட்டதாரி மற்றும் எம்பிஏ படித்தவர் ஆவார்.
இந்நிலையில் பாஜக வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் தன்னுடைய பெயர் இடம் பெற்றிருப்பதை அறிந்த மணிகண்டன் அதிர்ச்சி அடைந்தார். தன்னிடம் கேட்காமலே, தனக்கு அறியாமலேயே பாஜக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து மணிகண்டன் நிருபர்களிடம் கூறுகையில், "நான் பாஜக கட்சியில் சேரவும் இல்லை. பாஜக ஆதரவாளரும் இல்லை. ஆனால், என்னுடைய பெயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஒருவேளை வேறு யாராவது இருக்கலாம் என நினைத்து சந்தேகத்துடன் கேட்டபோது என்னுடைய பெயரைத்தான் அறிவித்திருந்தனர்.
வயநாடு மாவட்டத்தில் மனன்தாவடி தொகுதியில் வேட்பாளராக என்னைத் தேர்வு செய்தது பெருமையாக இருந்தாலும், எனக்குத் தேர்தலில் போட்டியிடுவதில் விருப்பமில்லை. என்னுடைய குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் வட்டாரத்தில் யாரும் அரசியலில் இல்லை. ஆதலால் நான் தேர்தலில் போட்டியிடும் திட்டம் ஏதும் இல்லை.
நான் கால்நடைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக எனக்குரிய வேலையைச் செய்து கொண்டு அமைதியாக, மகிழ்ச்சியாக வாழ்கிறேன். ஆதலால், மகிழ்ச்சியுடன் என்னை வேட்பாளராகத் தேர்வு செய்ததை நிராகரிக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
மனன்தாவடி தொகுதியில் மணிகண்டனை வேட்பாளராக அறிவிக்கும் முன் மாவட்ட பாஜக நிர்வாகிகள் அவரிடம் கலந்து பேசினார்களா என்பது குறித்து ஏதும் தகவல் இல்லை.
காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் பி.கே.ஜெயலட்சுமிக்கு ஆதரவு அதிகமாக இருப்பதால், அவரே இந்தத் தொகுதியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.