கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் முதல்வர் பினராயி விஜயன், தர்மதம் தொகுதியில் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
தர்மதம் தொகுதியில் பினராயி விஜயனை எதிர்த்து காங்கிரஸ் கூட்டணியான ஃபார்வர்டு பிளாக் கட்சி போட்டியிடுவதாக இருந்தது. இதற்கான வேட்பாளராக தேவராஜன் அறிவிக்கப்பட்டிருந்தார். ஆனால், நேற்று திடீரென பினராயி விஜயனுக்கு எதிராகப் போட்டியிட முடியாது எனக் கூறி வாபஸ் பெற்றார்.
கேரள மாநிலத்தில் உள்ள 140 தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 6-ம் தேதி ஒரு கட்டமாகச் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) 85 இடங்களில் போட்டியிடுகிறது, கூட்டணிக் கட்சிகளுக்கு 55 இடங்களை ஒதுக்கியுள்ளது.
அதே நேரத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎப்) மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் காய்களைத் தீவிரமாக நகர்த்தி வருகிறது. காங்கிரஸ் கட்சி 91 இடங்களில் போட்டியிடுகிறது.
இந்நிலையில் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தர்மதம் தொகுதியில் முதல்வர் பினராயி விஜயன் போட்டியிடுகிறார். கண்ணூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த முதல்வர் பினராயி விஜயன், இன்று வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அப்போது முகத்தில் ஷீல்ட், முகக்கவசம், கைகளில் உறை அணிந்திருந்தார். தர்மதம் தொகுதியில் பினராயி விஜயன் 2-வது முறையாகப் போட்டியிடுகிறார்.
முதல்வர் பினராயி விஜயனுடன் கண்ணூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.வி.ஜெயராஜ் உடன் வந்திருந்தார்.
பினராயி விஜயனை எதிர்த்து, காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஃபார்வர்டு பிளாக் வேட்பாளர் தேவராஜன் நிறுத்தப்பட்டிருந்தார். ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் தேசியச் செயலாளரான தேவராஜன், பினராயி விஜயனை எதிர்த்துப் போட்டியிடுவதாக இருந்த நிலையில் அதிலிருந்து திடீரெனப் பின்வாங்கினார்.
காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஃபார்வர்டு பிளாக் கட்சி, மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளுடன் இணைந்திருப்பதால், தர்மதம் தொகுதியில் பினராயி விஜயனை எதிர்த்துப் போட்டியிட முடியாது என மறுத்துவிட்டது. இதனால் வேறு வழியின்றி காங்கிரஸ் கட்சியே தனது வேட்பாளரை நிறுத்த வேண்டியுள்ளது.
அனைத்து இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் மத்திய தேர்தல் குழு நேற்று நடத்திய ஆலோசனையில், " தர்மதம் தொகுதியில் பினராயி விஜயன் வெற்றி உறுதி செய்யப்பட்ட நிலையில் அவரை எதிர்த்து தேசியச் செயலாளர் தேவராஜனை நிறுத்த விருப்பமில்லை" என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு தர்மதம் தொகுதியில் போட்டியிட்ட பினராயி விஜயன் 56 சதவீதம் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மாம்பரம் திவாகரனைவிட 37 ஆயிரம் வாக்குகளைக் கூடுதலாக பினராயி விஜயன் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.