இந்தியா

எரிபொருள் மீது அதிக வரி வசூலிப்பு: மத்திய அரசு மீது ராகுல் குற்றச்சாட்டு :

செய்திப்பிரிவு

புதுடெல்லி: பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மீது மத்திய அரசு அதிக வரி வசூலிப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், “மத்திய அரசு பட்டப்பகலிலேயே கொள்ளை அடிக்கிறது. முதலாவதாக, சமையல் எரிவாயு, டீசல், பெட்ரோல் மீது அதிக வரி வசூலிக்கிறது. 2-வதாக பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வங்கிகளை தனது நண்பர்களுக்கு விற்பனை செய்வதன் மூலம், பொதுமக்களின் பங்குகளையும் வேலைவாய்ப்பையும் பறிக்கிறது. நண்பர்கள் பயனடைவதற்காக நாட்டை அடகு வைப்பதுதான் பிரதமரின் ஒரே கொள்கை” என பதிவிட்டுள்ளார். கடந்த 2014-ம் ஆண்டில் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, பெட்ரோலியம் பொருட்கள் மீதான வரி மூலம் ரூ.21 லட்சம் கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் ராகுல் குற்றம் சாட்டி உள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு கடந்த 8-ம் தேதி தொடங்கியது. அப்போது, பெட்ரோலிய பொருட்கள் மீதான விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் தொடர் அமளியில் ஈடுபட்டதால், இரு அவைகளும் முடங்கியது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT