கோப்புப்படம் 
இந்தியா

மம்தா பானர்ஜி பாதுகாப்பில் கவனக்குறைவாக இருந்த ஐபிஎஸ் அதிகாரியை இடைநீக்கம் செய்க: மேற்கு வங்க அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு

பிடிஐ

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி மீது திட்டமிட்ட தாக்குதல் ஏதும் நடக்கவில்லை. அவரின் பாதுகாப்பில் கவனக்குறைவு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு சரியாக வழங்க ஐபிஎஸ் அதிகாரி விவேஷ் சாஹேயை உடனடியாக இடைநீக்கம் செய்ய மாநில அரசுக்குத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

நந்திகிராம் தொகுதியில் போட்டியிடும் மம்தா பானர்ஜி கடந்த 10-ம் தேதி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, மர்மநபர்களால் தாக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, காலிலும், கழுத்திலும் காயம் ஏற்பட்டதாகக் கூறி மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மம்தா பானர்ஜியை யாரும் தாக்கவில்லை, அவர் நாடகமாடுகிறார் என்று பாஜக, காங்கிரஸ், மற்றும் இடதுசாரிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

ஆனால், முதல்வர் மம்தா பானர்ஜி தாக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் தேர்தல் ஆணையத்திடம் சென்று மனு அளித்தனர்.

இந்நிலையில் மாநிலத் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் பார்வையாளர்கள், தலைமைச் செயலாளர் ஆகியோர் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தாக்கப்பட்டது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது

மாநில தேர்தல் பார்வையாளர்கள் அஜெய் நாயக், விவேக் துபே மற்றும் மாநில அரசு அறிக்கை தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையில், " மம்தா பானர்ஜி திட்டமிட்டுத் தாக்கப்படவில்லை. அவருக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பில் குறைபாடுகள் இருந்தன" எனத் தெரிவிக்கப்பட்டது.

தேர்தல் பார்வையாளர்கள் அளித்த அறிக்கையின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, " மம்தா பானர்ஜிக்கு பாதுகாப்பு வழங்கிய இசட்பிளஸ் பிரிவின் இயக்குநர் ஐபிஎஸ் அதிகாரி விவேக் சாஹேயை உடனடியாக அந்த பதவியிலிருந்து நீக்கி, அவரை இடைநீக்கம் செய்ய வேண்டும். கடமையை முறையாகச் செய்யாத விவேக் மீது ஒரு வாரத்துக்குள் குற்றச்சாட்டுப் பதிவு செய்யவேண்டும்.

மாநிலத் தலைமைச்செயலாளர், காவல் துறை டிஜிபியுடன் ஆலோசித்து தகுதியான அதிகாரியை அந்தப் பதவிக்கு நியமிக்க வேண்டும். அடுத்த 3 நாட்களுக்குள் இந்த பதவிக்கு புதிய அதிகாரி நியமிக்கப்பட வேண்டும்.
புர்பா மெதினிபூர் மாவட்ட ஆட்சியராகவும், தேர்தல் அதிகாரியாகவும் இருந்த விபுல் கோயல் மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக ஸ்மிதா பாண்டே நியமிக்கப்பட வேண்டும்.

புர்பா மெதினிபூர் காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த பிரவிண் பிரகாஷ் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட வேண்டும். மம்தா பானர்ஜிக்கு பாதுகாப்பு அளிக்கும் பொறுப்பில் இருந்த கண்காணிப்பாளர் பிரவிண், அவருக்கு முறையான பாதுகாப்பு வழங்கவில்லை. அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய வேண்டும்.

மெதினிபூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சுனில்குமார் யாதவை நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT