நாட்டில் நிலவி வரும் சகிப்பின்மைக்கு எதிராக அறிவுஜீவிகள் நடத்தும் போராட்டம் வன்முறையில்லாமல் கவித்துவமாக இருப்பதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
பனாஜியில் என்.எஃப்.டி.சி. திரைப்பட விழாக்களுக்கிடையே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“அனைத்து எதிர்ப்புகளும் செம்மையாக இருக்க வேண்டும், எந்த ஒரு எதிர்ப்பும் செம்மையாக இருப்பதே சிறந்தது. ஒருவரையொருவர் அடித்துக் கொள்ளாமல் எதிர்பாளர்களின் அணுகுமுறை கவித்துவமாக உள்ளது.
மஹாத்மா காந்தி பிறந்த மண்ணிலிருந்து வந்துள்ள நாம் உலகத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ வேண்டும். ஒட்டுமொத்த புரட்சியையும் அகிம்சை மூலமே கொண்டு வர முடியும் என்பதை உலகிற்கு எடுத்துக் காட்டியவர் மஹாத்மா காந்தி” என்றார் ரஹ்மான்.
நாட்டில் முஸ்லிம்கள் பாதுகாப்பாக இல்லையா என்று கேட்டதற்கு, “இந்தக் கேள்விக்கு பதில் அளிக்கும் மனநிலையில் நான் இல்லை” என்றார்.
அதே போல், பள்ளிகளில் இசையையும் ஒரு பாடமாகச் சேர்க்க வேண்டும், இது மாணவர்களின் தயை உணர்வை வளர்த்தெடுக்கும் என்று இசைஞானி இளையராஜா கூறியதை ஆதரிக்கும் ரஹ்மான், “அவரது (இளையராஜா) கருத்தை நான் வரவேற்கிறேன். வாழ்க்கை பற்றிய எனது கொள்கையும் அதுவே, ஒருவருக்கு இசை தெரிந்திருந்தால் அது அவரது ஆன்மாவைத் தீண்டி கருணையைத் தூண்டும், இதுதான் மிக முக்கியம். ஒருவர் இசை மூலம் தயா குணம் படைத்தவராக மாறமுடியும்” என்றார்.
அமீர் கான் சகிப்பின்மை பற்றி கூறிய கருத்து பற்றி கேட்ட போது, “என்னை வம்புக்கு இழுக்காதீர்கள்” என்றார்.
முன்னதாக ஈரான் திரைப்படம் 'முகமது:மெசஞ்சர் ஆஃப் காட்' படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்ததற்கு எதிராக அவர் மீது மும்பையைச் சேர்ந்த ரஸா அகாடமி பத்வா அறிவித்திருந்தது.
அப்போது டெல்லி மற்றும் உ.பி. முதல்வர்கள் ரஹ்மான் இசைக் கச்சேரியை கடைசி நிமிடத்தில் ரத்து செய்தனர். விஸ்வ இந்து பரிஷத் ரஹ்மானின் ‘கர்வாப்சி’க்கு அழைப்பு விடுத்து ரஹ்மான் இந்து மதத்தைத் தழுவ வேண்டும் என்று வலியுறுத்தியது.
இந்நிலையில் நாட்டில் நிலவி வரும் சகிப்பின்மை அதனையடுத்த எதிர்ப்புப் போராட்டங்கள், செயல்பாடுகள் பற்றி ரஹ்மான் இவ்வாறு கூறியிருப்பது பொதுவாகவே நிலவி வரும் சகிப்பின்மை பற்றிய கருத்தாக எடுத்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.