இந்தியா

கரீனா கபூருடன் செல்பி எடுத்துக்கொண்ட சத்தீஸ்கர் மாநில முதல்வர் ரமண் சிங்: காங்கிரஸ் கட்சி கண்டனம்

பிடிஐ

சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின்போது அம்மாநில முதல்வர் ரமண் சிங் இந்தி நடிகை கரீனா கபூருடன் ‘செல்பி’ எடுத்துக்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மாநில பள்ளிக்கல்வி மற்றும் மகளிர், குழந்தைகள் மேம்பாட்டுத் துறையும் ‘யுனிசெப்’ அமைப்பும் இணைந்து ராய்ப்பூரில் குழந்தைகள் உரிமை தொடர்பான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன. இதில் யுனிசெப் அமைப்பின் இந்தியாவுக்கான விளம்பரத் தூதர் கரீனா கபூர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்ச்சியில், 36 பள்ளி களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 31 சிறந்த மாணவிகள் மற்றும் 5 ஆசிரியர்களுக்கு ‘சத்தீஸ்கர் ரத்னா’ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக கலந்துகொண்ட மாநில முதல்வர் ரமண் சிங், மேடையில் அமர்ந்திருந்தபோது கரீனா கபூருடன் செல்பி எடுப்பது போன்ற புகைப்படம் வெளியாகி உள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் பூபேஷ் பாகல் கூறும்போது, “மாநிலத்தில் நிலவும் வறட்சி காரணமாக விரக்தி அடைந்த பல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவர்களது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் சொல்வதை விடுத்து, முதல்வர் ரமண் சிங் திரைப்பட நடிகையுடன் செல்பி எடுத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்” என்றார்.

இதற்கிடையே, அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “முதல்வர் எந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும், விருந்தினர் களுடனும் குழந்தைகளுடனும் படம் எடுத்துக் கொள்வது வழக்கம். இந்த நிகழ்ச்சியின்போதும் அவ் வாறுதான் புகைப்படம் எடுத்துக் கொண்டார்” என்றார்.

SCROLL FOR NEXT