இந்தியா

சகிப்பின்மை விவகாரம்: ஷாருக்கான் திடீர் மறுப்பு

செய்திப்பிரிவு

சகிப்பின்மை கொண்ட நாடாக இந்தியா மாறிவிட்டது என்று ஒருபோதும் கருத்து தெரிவிக்கவில்லை என பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மறுப்பு தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தில் மாட்டிறைச்சி உண்டதால் நிகழ்ந்த தாத்ரி கொலை, கர்நாடகாவில் எழுத்தாளர் கல்புர்கி படுகொலை ஆகிய சம்பவங்களால் நாட்டில் சகிப்பின்மை அதிகரித்துவிட்டதாக எழுத்தாளர்கள் கண்டனம் தெரிவித்தனர். அத்துடன் தங்களது விருதுகளையும் மத்திய அரசிடம் திரும்ப ஒப்படைத்தனர்.

பாலிவுட் நடிகர் ஷாருக்கானும் இதற்கு ஆதரவாக குரல் கொடுக்கும் வகையில் சமீபத்தில் கருத்து தெரிவித்தார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த இந்து அமைப்புகள் ஷாருக்கான் பாகிஸ்தான் ஏஜெண்டாக செயல்படுகிறார் என்று வசைமாரி பொழிந்தன. இந்நிலையில் சகிப்பின்மை கொண்ட நாடாக இந்தியா மாறிவிட்டது என்று தான் ஒருபோதும் தெரிவிக்கவில்லை என நடிகர் ஷாருக்கான் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து நாளிதழ் ஒன்றுக்கு நேற்று அவர் அளித்த பேட்டியில், ‘‘ஒரு சில விவகாரங்கள் குறித்து நான் தெரிவித்த கருத்தை சிலர் திரித்து கூறிவிட்டனர். இதனால் பிரச்சினையில் சிக்கிக் கொண்டேன்.. சகிப்பின்மை குறித்து சிலர் கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்தேன். இந்தியாவை வளர்ச்சியடைந்த மற்றும் மதசார்பற்ற நாடாக மாற்றுவதில் இளைஞர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று தான் தெரிவித்தேன். ஆனால், அதனை அவர்களுக்கு ஏற்றபடி திரித்து விட்டனர்’’ என்றார்.

SCROLL FOR NEXT