நர்சிங் படிப்புகள், இளங்கலை நர்சிங், பிஎஸ்சி லைஃப் சயின்ஸ் உள்ளிட்ட படிப்புகளுக்கு நீட் நுழைவுத் தேர்வு மதிப்பெண்களைப் பயன்படுத்தி மாணவர் சேர்க்கை நடத்தலாம் என்று தேசியத் தேர்வு முகமை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, பல் மற்றும் மருத்துவப் படிப்புகளுக்கு அகில இந்திய அளவில் நீட் தகுதித் தேர்வு கடந்த 5 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், நீட் தகுதித் தேர்வினால் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்பு பறிக்கப்படுகிறது எனக் கூறி தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் தொடர்ந்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக தமிழகத்தில் நீட் தகுதித் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
கடந்த ஆண்டு கரோனா வைரஸ் பரவல் இருந்த காலத்திலும் கூட நீட் தேர்வு, மாணவர்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடத்தி முடிக்கப்பட்டது. இந்நிலையில் 2021-22ஆம் ஆண்டுக்கான நீட் தகுதித் தேர்வு குறித்து தேசிய தேர்வு முகமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், "2021-22ஆம் ஆண்டுக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஏஎம்எஸ், பிஎஸ்எம்எஸ், பியுஎம்எஸ், பிஹெச்எம்எஸ் ஆகிய படிப்புகளுக்கு ஏற்கெனவே இருக்கின்ற விதிமுறைகளைப் பின்பற்றி தேசிய தேர்வு முகமை நீட் நுழைத்தேர்வு நடத்த உள்ளது.
நீட் தகுதித் தேர்வின் முடிவுகளை அடிப்படையாக வைத்து, மத்திய, மாநில அரசுகளின் கல்வி நிறுவனங்கள் பிஎஸ்சி நர்சிங் கல்லூரி, நர்சிங் பள்ளிகள், பிஎஸ்சி நர்சிங், பிஎஸ்சி லைஃப் சையின்ஸ் ஆகிய படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு விதிமுறைகளின்படி பயன்படுத்திக் கொள்ளலாம்.
நீட் தகுதித் தேர்வு இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 11 மொழிகளில் ஆகஸ்ட் 1-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்படும். நீட் தொடர்பான பாடங்கள், பாடப்பிரிவுகள், தகுதி, வயது, ஒதுக்கீடு, தேர்வுக் கட்டணம், தேர்வு மையங்கள் ஆகியவை குறித்து விரைவில் htttps://ntaneet.nic.in இணையதளத்தில் வெளியிடப்படும். நீட் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் தொடர்ந்து இணையதளத்தைக் கண்காணிக்க வேண்டி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்''.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.