தமிழகம், கேரளா, அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கும் வேட்பாளர்கள் குறித்து இறுதி செய்ய பாஜகவின் மத்திய தேர்தல் குழு இன்று மாலை கூடுகிறது.
பிரதமர் மோடி தலைமையில், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர் அமித் ஷா, பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், உறுப்பினர்கள் ஆகியோர் கூடி ஆலோசனை நடத்துகின்றனர்.
இந்தக் கூட்டத்தின் முடிவில் தமிழகம், கேரளா, புதுச்சேரி, உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கும் வேட்பாளர்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிடுவார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 20 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது. இந்த 20தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் இன்று இரவுக்குள் அறிவிக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அசாம் மாநிலத்தில் முதல் 2 கட்டத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. 3-ம் கட்டத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பெயரும் அறிவிக்கப்படலாம். மேற்கு வங்கத்தில் ஏற்கெனவே 2 கட்டத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், அடுத்த 2 கட்டத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்படலாம்
இதற்கிடையே பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா இல்லத்தில் நேற்று பாஜக மூத்த தலைவர் அமித் ஷா, தேசிய பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் உள்ளிட்டோர் கூடி வேட்பாளர்கள் குறித்து இன்று அதிகாலை ஒருமணி வரை ஆலோசித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து அசாம் பாஜக மாநிலத் தலைவர் ரஞ்சித் குமார் தாஸ் நிருபர்களிடம் இன்று கூறுகையில், " பாஜகவின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம், இன்று மாலை 5 மணிக்கு மேல் பிரதமர் மோடியின் தலைமையில் கூடுகிறது. இந்தக் கூட்டத்தின் முடிவில் வேட்பாளர்கள் குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகும்" எனத் தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற திட்டத்துடன் காய்களை நகர்த்தி வருகிறது. இதற்காக பாஜகவின் 22 மூத்த தலைவர்களுக்குப் பல்வேறு இலக்குகள் கொடுக்கப்பட்டு, களப் பணியில் இறக்கி விடப்பட்டுள்னர், தீவிரமான பிரச்சாரத்திலும் ஈடுபட்டுள்ளனர். இது தவிர மேற்கு வங்கத்தில் 109 தொகுதிகள் மீது சிறப்புக் கவனம் செலுத்தியுள்ள பாஜக அங்குப் பிரச்சாரத்தையும், பணிகளையும் தீவிரப்படுத்தியுள்ளது.