இந்தியா

பிஹார் ரயில் விபத்துக்கு ரயில்வே துறையின் அலட்சியமே காரணம்: லாலு தாக்கு

செய்திப்பிரிவு

டெல்லி - திப்ருகார் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்திற்கு ரயில்வே நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என்று முன்னாள் ரயில்வே துறை அமைச்சரும், ராஷ்ட்ரீய ஜனதா கட்சித் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விபத்து ரயில்வேத் துறைக்கு மிக பெரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பிஹாரில், டெல்லி- திப்ருகர் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை 2.15 மணியளவில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகினர்.

ரயில் சாப்ரா ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தடம் புரண்டது. விபத்தில் உயிரிழந்தோருக்கு முன்னாள் ரயில்வேத் துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

லாலு கண்டனம்:

விபத்து குறித்து அவர் கூறுகையில், " நான் ரயில்வேதுறையின் அமைச்சராக இருந்துள்ளேன். ராஜ்தானி ரயில் கிளம்ப்புவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னரே, சோதனை ஓட்டம் ஒன்று நடத்தப்பட வேண்டும். இந்த சோதனை ஓட்டம், ரயில் தடத்தை சோதிக்க வேண்டி நடத்தப்படுவது ஆகும். இந்த சோதனை ஓட்டம் நடத்தப்ப டவில்லை. இதுவே விபத்துக்கு காரணம்.

இது ரயில்வே நிர்வாகத்தின் மெத்தனத்தை தெளிவாக காட்டுகிறது. சோதனை ஓட்டம் செய்யப்பட வேண்டிய பைலட் என்ஜினை ஏன் ஓட்டவில்லை என்பதை நிர்வாகத்தினர் விளக்க வேண்டும்.

மேலும், இந்த விபத்துக்கு மாவோயிஸ்டிகளின் நாசவேலை காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கு மாவோயிஸ்டுகள் காரணமாக இருந்தால், அவர்களுக்கு எதிராக நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் . எனினும் சதி செயல் குறித்து முன்னதாகவே அச்சுறுத்தல் வந்ததாக கூறப்படுகிறது. அப்பாடியானால், நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றே கூற வேண்டும்" என்று லாலு பிரசாத் கூறினார்.

SCROLL FOR NEXT